புழல், டிச.16: புழல் அருகே பைக் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், மாநகர பேருந்து டிரைவர் பரிதாபமாக பலியானர். விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் அடுத்து காவாங்கரை, கோ.சு.மணி தெரு சேர்ந்தவர் சரவணன் (எ) சரவணகுமார் (52). மாதவரம் போக்குவரத்து பணிமனையில் தடம் எண்:33சி பேருந்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு, சண்முகப்பிரியா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர், நேற்று மதியம் பணி முடித்துவிட்டு, தனது பைக்கில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, புழல் ஜிஎன்டி சாலை, கதிர்வேடு சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் மின்னல் வேகத்தில் வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சரவணகுமாரின் 2 கால்களும், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார், சரவணகுமாரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த ேபாலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மும்பையை சேர்ந்த உசேன் (45) என்பவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
