மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் தற்போது நாளொன்றுக்கு 470க்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன. இவ்விமானங்கள் சென்னையில் வந்து தரையிறங்குவதற்கு 3.66 கிமீ நீளமுள்ள முதல் பிரதான ஓடுபாதை மற்றும் 2.89 கிமீ நீளமுள்ள 2வது ஓடுபாதை என மொத்தம் 2 ஓடுபாதைகள் உள்ளன. அதேபோல், விமானங்கள் நிற்பதற்கு சுமார் 130 ஃ‘பே’க்கள் (Bay) உள்ளன. இதில், உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களின் பயன்பாட்டுக்கு சுமார் 60 ஃபேக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மற்றவை சரக்கு விமானங்கள், தனி விமானங்கள், ஏர்ஆம்புலன்ஸ் விமானங்கள் போன்றவற்றுக்கும், விமான நிலைய ஒதுக்குப்புறத்தில் உள்ள ரிமோட் ஃபேக்கள் நீண்ட காலமாக இயக்கப்படாமல் நிறுத்தி வைத்துள்ள விமானங்கள், பழுதுபார்க்க வேண்டிய விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதோடு, சென்னை விமானநிலைய முதல் மற்றும் 2வது ஓடுபாதைகளில் வந்து தரையிறங்கும் விமானங்கள், நிற்கும் இடங்களான ஃபேவுக்கு செல்வதற்கு முன், ஓடுபாதைக்கும் ஃபேவுக்கும் இடையே இணைப்பு சாலைகளாக ‘டாக்சி வே’க்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஓடுபாதையில் விமானங்கள் இறங்கி டாக்சி வே வழியாக விமானம் நிற்கும் இடத்துக்கு செல்லும்போது மெதுவாக சென்று வந்தன. இதனால் அடுத்தடுத்து விமானங்கள் தரையிறங்குவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விமானநிலைய பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், முக்கிய டாக்சி வேயான எஃப் டாக்சி வே வளைவாக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவை மாற்றி வடிவமைக்கப்பட்டு, விமானங்கள் வேகமாக செல்லும் விதத்தில் ‘டாக்சி வே யூ’ என்று மாற்றப்பட்டுள்ளது இதுபோல் ஓடுபாதைகளில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சென்னை விமானநிலையத்தில் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்போது, விமானங்களை கையாளும் திறன்கள் மேலும் அதிகரிக்கும் வகையில், சென்னை விமானநிலையத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் சுமார் 3.66 கிமீ நீளமுள்ள பிரதான முதல் ஓடுபாதையை மறுசீரமைக்கும் பணிகள் அடுத்தாண்டு துவங்கப்படுகிறது. இப்பணிகள் நடைபெறும்போது, சென்னை விமானநிலையத்தில் விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை விமானநிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஓடுபாதை முழுமையாக மறுசீரமைப்பு செய்வது அவசியம். விமான மற்றும் பயணிகளின் பாதுகாப்பு நலன்களுக்காக, தற்போது அந்த பராமரிப்பு பணிகளை முதல் பிரதான ஓடுபாதையில், விமான போக்குவரத்தை முழுமையாக நிறுத்திவிட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டால், ஒரு மாதமோ அல்லது 45 நாட்களில் இப்பணிகள் முடிந்துவிடும். எனினும், பிரதான ஓடுபாதையில் விமான சேவைகளுக்கு இடையே மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது, அவை முடிவதற்கு 6 மாதங்கள் முதல் ஒராண்டு வரைகூட ஆகலாம் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், சென்னை விமானநிலைய 2வது ஓடுபாதையின் நீளம் குறைவாக இருப்பதால், அதை முழுமையாக விமான சேவைகளுக்கு பயன்படுத்த முடியாது. இதில் 800 மீட்டர் நீளம் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் சுமார் 2 கிமீ நீளமுள்ள ஓடுபாதையை மாற்று பாதையாக பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதுதவிர, அடுத்தாண்டு பிரதான ஓடுபாதையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறும்போது, சிறிதளவு விமான சேவை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம், பயணிகளுக்கும் விமான சேவைகளுக்கும் பெரிதளவில் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு பணிகள் நடைபெறும் என்று விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
