பவானி : அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுவது வழக்கம். இச்சந்தையில், வியாபாரிகள் எடைகளில் முறைகேடு செய்வதாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரின் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்பேரில், பவானி தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் குருவரெட்டியூர் வாரச்சந்தையில், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று கூட்டாய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கறிக்கடைகள், மீன் கடைகள் மற்றும் வாரச்சந்தையில் செயல்படும் காய்கறி, மளிகை கடைகளில் முத்திரையிடப்படாத தராசுகளை எடையளவுக்கு பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, 10க்கும் மேற்பட்ட தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் அதிகாரிகளைக் கண்டித்து சந்தை முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அவ்வழியே வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி, குருவரெட்டியூர் ஊராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார் மற்றும் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட தராசுகளை அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
இதனால், சமாதானமடைந்த வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
