×

சென்னை மாநகர பகுதிகளில் நடைபாதை வியாபாரிகளுக்கு கட்டணம், விற்பனை சான்று: மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னையில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் நோக்குடன், அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு விரைவில் விற்பனை சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அத்துடன், திருத்தப்பட்ட புதிய ஆண்டு கட்டண விவரங்களையும் அறிவித்துள்ளது. வெளிப்படையான ஒழுங்குமுறையையும், கட்டணங்களில் ஒரு சீரான தன்மையையும் கொண்டு வருவதற்காகவே இந்த புதிய கட்டண அமைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட ஆண்டு கட்டண விவரங்கள்:
*புதிய அமைப்பின்படி, நடைபாதை வியாபாரிகள் செலுத்த வேண்டிய கட்டணங்கள், அவர்கள் பயன்படுத்தும் இடத்தின் அளவு மற்றும் வியாபார வகையைப் பொறுத்து மாறுபடுகின்றன.
* அதிக இடத்தைப் பயன்படுத்துவோர்: நிலையான அல்லது நகரும் வியாபாரிகள் 25 சதுர அடிக்கு மேல் இடத்தை ஆக்கிரமித்திருந்தால், அவர்கள் ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்த வேண்டும்.
* நிரந்தர இடமில்லாத நகரும் வியாபாரிகள்: நிலையான விற்பனை இடம் இல்லாமல், நகர்ந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் ஆண்டிற்கு ரூ.1,500 செலுத்த வேண்டும்.

1. முழுநேர நிரந்தர வியாபாரிகள்: முழு நேரமாக ஒரே இடத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு, அந்த இடத்தின் அரசு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10 சதுர அடி வரை: வழிகாட்டி மதிப்பில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ.750 ஆகும்.* 25 சதுர அடி வரை: வழிகாட்டி மதிப்பில் 3% கட்டணமாக வசூலிக்கப்படும். இதற்கான குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ.3,000 ஆகும்.

2. பகுதி நேர வியாபாரிகள்:
பகுதி நேரமாகவோ அல்லது இடம் பகிர்ந்து வியாபாரம் செய்பவர்களுக்கான கட்டணங்கள் குறைவாக உள்ளன. இவர்கள் வழிகாட்டி மதிப்பில் 0.5% என்ற குறைந்த விகிதத்தில் கட்டணம் செலுத்துவார்கள். இவர்களுக்கான குறைந்தபட்ச ஆண்டு கட்டணம் ரூ.375 ஆகும்.

3. நகரும் வியாபாரிகள்:
மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவோர்:
10 சதுர அடி வரை உள்ள இடத்திற்கு ஆண்டு கட்டணம் ரூ.750.
10 முதல் 25 சதுர அடி வரையிலான இடத்திற்கு ரூ.1,500.
25 சதுர அடிக்கு மேல் உள்ள இடத்திற்கு ரூ.3,000 செலுத்த வேண்டும்.

மோட்டார் வாகனங்கள் இல்லாத நகரும் வியாபாரிகள்:
இவர்கள் பயன்படுத்தும் இடத்தைப் பொறுத்து ரூ.375 முதல் ரூ.1,500 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
தலைச் சுமை வியாபாரிகள்: இவர்கள் ஆண்டிற்கு பெயரளவுக்கு ரூ.250 மட்டுமே செலுத்தினால் போதுமானது. இதற்கு முன், நடைபாதை வியாபார மண்டல அமலாக்க குழுவால், மண்டலங்கள் முழுவதும் உள்ள வியாபாரிகளிடம் மாதந்தோறும் ரூ.100 என்ற சீரான வாடகை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறை இப்போதும் சில மண்டலங்களில் தொடர்கிறது.

ஆனால், புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த கட்டண அமைப்பு, நடைபாதை விற்பனை செயல்பாடுகளை சீராக நிர்வகித்து, வியாபாரிகளுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க உதவும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,Chennai Municipality ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...