*மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
மதுரை : மதுரையின் பழமை நதி என்ற பெருமைக்குரிய கிருதுமால் நதி, நகருக்குள் 30 கி.மீ பயணிக்கிறது. இதில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் நிலையில், அதன் கரைகளில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.நதிக்கரைகளில் நாகரிகம் தோன்றியது என்பதனை உறுதி செய்ய பல்வேறு வரலாற்று சான்றுகள் உள்ளன.
இதன்படி, பழமை வாய்ந்த மதுரை நகரும் நதிகளின் கரைகளில்தான் செழித்திருந்தது. வைகை நதிக்கு துணையாக, அன்றைய காலக்கட்டத்தில் மதுரைக்கு ‘கிருதுமால்’ நதியும் செழிப்பூட்டியது. ஆனால் இன்றைக்கு இந்த கிருதுமால் நதி ஆக்கிரமிப்புகளில் சிக்கி ‘வாய்க்கால்’களாக மாறியிருக்கிறது.
கிருதுமால் நதி, மதுரையின் மேற்கில் உள்ள நாகமலையில் தோன்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாகமலை அடிவாரத்து புல்லூத்து, நாகதீர்த்தம், காக்கா ஊத்து நீர்ச்சுரப்புகளும் இதனை நிரூபிக்கின்றன. மதுரை நகருக்குள் ஓடிய இந்நதி, நகரத்து வடிகாலாகவும் இருந்ததுள்ளது.
மதுரையைக் கடந்து ராமநாதபுரம் மாவட்ட எல்லை வரை பல பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீர் தந்துகொண்டு இருந்துள்ளது. பழங்கால ஆவணங்களில், வைகைக்கு குறுக்கே மரம், செடி கொடிகளுடன் மணல் கொண்டு ‘கொரம்பு’ அமைத்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டதாக தகவல் இருக்கிறது. வைகையிலிருந்து மாடக்குளம், துவரிமான் கண்மாய்களுக்கு, கால்வாய்களில் நீர் சென்றுள்ளது. இக்கண்மாய்களின் மறுகால் மாயும் தண்ணீர் கிருதுமால் நதியில் சேர்வதால், இந்த நதியின் முகப்பருகே வைகை நீர் கலந்ததும் தெரிகிறது.
இந்த கிருதுமால் நதி சுமார் 80 கி.மீட்டர் ஓடிச்சென்று, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா குண்டாற்றுடன் கலப்பதால் இதனை ‘குண்டாற்று உபநதி’ என்றும் அழைக்கின்றனர்.
எனினும் இந்த கிருதுமால் நதி, தனக்கான நீராதாரத்தை உள்ளூர் மழைப்பொழிவோடு, வைகையாற்றிலும் பெற்றதை 1898ம் ஆண்டைய குளங்கள் சீரமைப்புத் திட்ட வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. இது வைகையின் உப நதியாகவும் மதிப்பிடப்படுகிறது. 1906ம் ஆண்டின் மதுரை மாவட்ட கேட்டகிரியும் இதை உறுதிப்படுத்துகிறது.
அணை கட்டுவதற்கு முன்பு, வைகையில் தொடர்ந்து நீரோட்டம் இருந்துள்ளது. அப்போது கிருதுமால் நதியுடன், அதன் கண்மாய்களும் வளம் பெற்றதாக இருந்துள்ளன.மதுரை, நாகமலையில் பிறந்த இந்நதியின் நிலை காலப்போக்கில் மாடக்குளம் கண்மாயின் மறுகால் வரை மாயமாகி, துவரிமான் கண்மாய்க்கான வரத்துக் கால்வாய்களும் அழிந்துள்ளன.
வைகையிருந்து கிருதுமாலுக்கான இணைப்பும் இல்லாது போனது. அரிப்பினால் ஆற்றின் தளமட்டம் குறைந்து, வாய்க்கால்கள் மேட்டு பகுதிக்கு சென்றதால் கிருதுமால் நதி துண்டுபட்டு போனது.
காலப்போக்கில் நீரோட்டம் இல்லாத இதன் கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் மாயமாக, நகரம் விரிவானதில் இந்நதி தற்போது, மதுரைக்குள் ‘கிருதுமால் வாய்க்கால்’ என்ற நிலையில் இருக்கிறது.
இந்நதியோரத்தில் நாகமலை முகப்பு முதல் பொன்மேனி, நியூ எல்லீஸ்நகர், திடீர்நகர், தெற்குவாசல், மாகாளிப்பட்டி, கீரைத்துறை வழியாக 30 கி.மீ.க்கு இடைப்பட்ட பகுதி ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளது.
இதனால், துண்டுபட்ட கால்வாய்களாக இருக்கிறது. மதுரைக்குள் மட்டுமின்றி, முதுகுளத்தூர் குண்டாறு வரை இந்த நதியை அடையாளப்படுத்த சரியான கரைகள் இல்லாத நிலை இருக்கிறது. கிருதுமால் நதி மூலம் 1898களில் தென் மாவட்டத்தின் மாங்குடி, ராங்கியம், கட்டனூர், இருஞ்சிறை, அபிராமம் உள்ளிட்ட 75 கண்மாய்கள் தண்ணீர் பெற்றுள்ளன. இன்று இதன் எண்ணிக்கை குறைந்துள்ளது.
நேரு தேசிய புனரமைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில திட்டகளால் பல கோடி செலவில் நீர் பாதைகள் புனரமைக்கும் பணியை, மதுரை மாநகராட்சி மேற்கொண்டது. கிருதுமால் நதியின் நீர் செல்லும் பாதைகளின் இருபுறமும் கான்க்ரீட் சுவர் பணிகள் நடந்தன. தற்போது, மாநகராட்சி எல்லைக்குள் 30 கி.மீ தூரம் ஆங்காங்கே துண்டுபட்டிருந்தாலும், முழுமையாக கிருதுமால் கரையோரம் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் போன்ற ஆக்கிரமிப்புகளை கணக்கிடும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.
* இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மாநகராட்சிக்கு உட்பட்ட விராட்டிபத்து 2வது பஸ் நிறுத்தத்தில் இருந்து முதல் பஸ் நிறுத்தம் வரை 700 மீட்டர் தூரத்திற்கு கிருதுமால் நதிக்கரையோர ஆக்கிரமிப்புகள் முதல்கட்டமாக அளவிடப்பட்டு வருகிறது. அரசு ஆவணங்கள் அடிப்படையில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களின் வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை தற்போது ஆய்வு செய்யப்படுகிறது.
திட்ட அனுமதி, பட்டா, சிட்டா ஆவணம் வைத்துள்ளனரா என அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட ஆய்வை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் நோட்டீஸ் அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்ந்து நகருக்குள் 30 கி.மீ தூரத்திற்கும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். ஏற்கனவே இதுபோன்ற பணிகள் நடந்தாலும், தற்போது பணிகள் வேகம் கண்டுள்ளன’ என்றார்.

