×

சிறுமி பலாத்கார வழக்கில் போலி சாமியாருக்கு 35 ஆண்டு சிறை: கர்நாடகா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

பெலகாவி: கர்நாடகாவில் சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியாருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தைச் சேர்ந்த லோகேஷ்வர் சுவாமி (30) என்பவர் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு ராய்பாக் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் 13ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை வீட்டில் விடுவதாகக் கூறி காரில் ஏற்றிய இவர், ஆந்திர மாநிலம் மந்திராலயத்திற்கு கடத்திச் சென்றார். அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மே 14ம் தேதி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், மீண்டும் பாகல்கோட் அழைத்து வந்து அங்கேயும் சீரழித்துள்ளார். இரண்டு நாட்கள் கழித்து மகாலிங்கபூர் பேருந்து நிலையத்தில் சிறுமியை இறக்கிவிட்ட அவர், ‘இங்கு நடந்ததை வெளியே கூறினால் கொன்றுவிடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆதாரமாக வைத்து முதலகி போலீசார் குற்றவாளியைக் கைது செய்தனர். பெலகாவி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் 8 சாட்சிகள் மற்றும் 78 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. குற்றம் உறுதியானதையடுத்து நீதிபதி சி.எம். புஷ்பலதா நேற்று தீர்ப்பளித்தார்.

அதில், ‘சிறுமியை ஏமாற்றி கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் குற்றவாளிக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைக்கவும் அரசுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Tags : Karnataka ,Belagavi ,Lokeshwar Swami ,Kalaburagi district ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...