×

தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் தேர்வு: சட்ட போராட்டம் நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய இந்திய மருத்துவ முறை மருத்துவப் படிப்புகளைப் பயின்று வரும் 2021-22 கல்வி ஆண்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு, 2027 மார்ச் முதல் நெக்ஸ்ட் என்னும் தகுதித் தேர்வு நடைபெற உள்ளதாக இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், எம்.பி.பி.எஸ் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு இத்தேர்வு 3 முதல் 4 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு ஆண்டு மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற பேராபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அதிகளவிலான மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. நெக்ஸ்ட் தேர்வால் அதிகளவில் பாதிக்கப்படுவது தமிழ்நாட்டின் மாணவர்கள் தான். எனவே, பொது மருத்துவ கட்டமைப்பை சிதைக்கும், மருத்துவ மாணவ, மாணவிகள் மருத்துவர் ஆவதை தடுக்கும் இத்தேர்வையும், மருத்துவத்துறையை கார்ப்பரேட் மயமாக்கி வரும் ஒன்றிய அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த சட்ட ரீதியான போராட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu ,Velmurugan ,Chennai ,Vazhuvurimai Katchi ,Unani ,Siddha Medicine ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்