யோகங்களை பற்றி அறிந்துகொள்ளும் முன் சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இரட்டையர்களாக பிறந்த இருவர்வாழ்வில் யோகங்களோ, புண்ணியங்களோ, முன்னேற்றமோ ஒரே மாதிரி இருப்பதில்லை. இருவருக்கும் ஒரே மாதிரியான ஜாதகம் இருக்கும். ஒரே மாதிரியான கட்டங்கள் இருக்கும். ஆனால், பலன்கள் மட்டும் மாறுபட்டிருக்கும் என்பதை அனுபவத்தின் வாயிலாகத்தான் அறிந்து கொள்ள முடியும். இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிர்களும் சில கர்மங்களையும் சில பூர்வ புண்ணியங்களையும் பெற்றுத்தான் பூமியில் பிறவியெடுக்கின்றன. அந்தப் பிறவியின் வாயிலாக அந்த ஜீவன் என்ன விஷயங்களை செய்யப் போகின்றது. என்ன விஷயங்களை சாதிக்கப்போகின்றது என்பது பூர்வ புண்ணியமும் ஞானமும் முடிவு செய்கின்றன. ஆசைகள் எப்பொழுது கர்மாக்களை உற்பத்தி செய்கின்றன. ஞானம் மட்டுமே ஒவ்வொரு ஜீவன்களை நல்வழிப்படுத்துகின்றன என்பது இயற்கையின் வரமாக உள்ளது. எந்த ஒரு செயலுக்கும் நன்மையும் தீமையும் உண்டு. ஆகவே, பூர்வ புண்ணியங்களை தொடர்பு கொள்ளும் சில யோகங்கள் சில சமயங்களில் ஆச்சர்யமான யோகங்களை தருவிக்கின்றன. அந்த யோகங்களில் ஒன்றுதான் இந்திர யோகம். இது சிறப்பான யோகம் என்பதை பூர்வ புண்ணியங்கள் விளக்கும்.
இந்திர யோகம் என்பது என்ன?
லக்னத்திற்கு ஐந்தாம் பாவகத்தில் (5ம்) சந்திரன் அமர்ந்து, ஐந்தாம் அதிபதியும் (5ம்), பதினோராம் அதிபதியும் (11ம்) பரிவர்த்தனை பெற்றிருப்பது இந்திர யோகம் ஆகும். இந்த இணைவுகளில் சாயா கிரகங்களான ராகு – கேதுக்கள் தொடர்புகள் கூடாது. ஐந்தாம் பாவகம் பூர்வ புண்ணியத்தையும் அறிவையும் ஞானத்தையும் குழந்தை செல்வங்களையும் நமது முன்னோர்களான பாட்டனார், பாட்டிகளையும், ஒரு தனி மனிதனின் சிந்தனைத் திறனையும் குறிக்கும் என்பதை ஜோதிட சாஸ்திரம் வலியுறுத்துகிறது.
இந்திர யோகத்தின் சூட்சுமங்கள் என்ன?
* பதினோராம் அதிபதியும் (11ம்), ஐந்தாம் அதிபதியும் (5ம்) நட்பு கிரகங்களாக இருந்தால் சிறப்பான பலன்கள் சிரமம் இல்லாமல் கிட்டும்.
* சந்திரன் ஐந்தாம் (5ம்) பாவகத்தில் பதினோராம் அதிபதியுடன் அமர்ந்தால், சிறந்ததன யோகம் உண்டாகும். ஒரு ரூபாய்க்கு வேலை செய்தால் இவர் பெறும் கூலியானது1000 ரூபாய் கொடுக்கும் என்பது சிறப்பான அமைப்பாகும்.
* ஐந்தாம் அதிபதியானது (5ம்) பதினோராம் பாவகத்துடன் தொடர்பு கொள்ளும் பொழுது இவருக்கு பிறக்கும் புத்திரர்களால் சிறந்த தனலாபம் பெறுபவர்களாக இருப்பார்கள்.
* இதில், ஐந்தாம் அதிபதியுடன் (5ம்) சந்திரன் நல்ல நிலையில் வளர்பிறை சந்திரனோடு நட்பு, ஆட்சி, உச்சம் என்ற கிரக அமைப்புடன் இணையப் பெற்றால் சிறந்த குபேர யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
* சிந்திப்பதை செயலாக்கம் செய்கின்ற யுக்தியை மிக எளிமையாக நடைமுறையோடு செய்து வெற்றிநடை போடுவார்கள் என்பது சிறப்பாகும்.
இந்திர யோகத்தின் பலன்கள் என்ன?
* சென்ற பிறவியில் அதிக புண்ணியங்களை செய்து, உடனே அடுத்த பிறவிக்குள் பயணப்பட்டவர்கள் இப்பிறவியில் அதன் பலன்களை அனுபவிக்கும் பாக்கியம் உள்ளவர்கள்.
* பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் அந்தந்த இடங்களில் ஆட்சி செய்கின்ற பலத்தை பெறுவதால், இவர் தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றியை நோக்கி பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
* நற்புண்ணியக் காரியங்களை செய்கின்ற உறவுகளையும் நல்ல தொடர்புகளையும் இந்த யோகம் கொண்ட ஜாதகர் பெறுவார் என்பது நிச்சயம்.
* தலைமைப் பண்புகள் இவரிடம் நிறைந்து காணப்படுவதால், இவரை நாடி தலைமைப் பதவிகள் தேடி வரும்.
* அதிர்ஷ்டம் தேடி வந்து இவரிடம் நல்ல விஷயங்களை கொடுத்து செல்லும் அமைப்பை உடையவராக இருப்பார்.
* குலதெய்வக் கோயில்களை கட்டி விஸ்தரிக்கும் பாக்கியங்களை கொண்டிருப்பார்.
* சில லக்னங்களுக்கு தகுந்தவாறு இன்னும் அதிக பலன்களை கொடுக்கக்கூடிய இந்த யோகத்தை பெற்றவராக ஜாதகர் இருப்பார்.
* தொழில், அரசியல் வாயிலாக முன்னேற்றம் பெறும் தொடர்புகளை தொடர்ந்து பெற்றுக்கொண்டே இருப்பார்.
* பொன் பொருள் சேர்க்கை, நிலம், வாகனங்கள் மற்றும் கால்நடைகள் போன்ற சேர்க்கைகள் உண்டாக்கும்.
* பட்டங்கள் மற்றும் ஆய்வுகள் செய்து முனைவர் பட்டம் வாங்கக்கூடிய அமைப்புகளை இந்த யோகம் கொடுக்கும்.
