×

வடமாநிலங்களில் தொடர் பனி மூட்டம் சென்னையில் இருந்து செல்லும் 7 விமானங்கள் ரத்து

சென்னை: டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து கடுமையான பனி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவுவதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி, வாரணாசி போன்ற இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. வடமாநிலங்களில் கடுமையான குளிர், பனி மூட்டம் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, நாடு முழுவதும் விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், சென்னை விமான நிலையத்திலும் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் காலை 10.45 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 11 மணிக்கு டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம், மாலை 5.20 மணிக்கு வாரணாசி செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 விமானங்களும், காலை 8.55 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா விமானம், காலை 9.50 மணிக்கு டெல்லி சென்னை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 10.20 மணிக்கு டெல்லி சென்னை ஏர் இந்தியா விமானம் ஆகிய மூன்று வருகை விமானங்கள் உள்பட 7 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

அதேபோல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து டெல்லி, அகமதாபாத், ஐதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் 7 விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணிநேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு கொண்டு இருக்கின்றன. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘வடமாநிலங்களில் மோசமான வானிலை நிலவுவதால் விமானங்கள் தாமதங்கள் ரத்து ஆகின்றன. எனவே சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் பயணிகள், உங்களுடைய விமானங்கள் காலதாமதம் ரத்து குறித்து, தாங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பயணங்களை அமைத்துக் கொள்ளுங்கள்’’ என்றனர்.

Tags : Chennai ,states ,northern ,Delhi ,Chennai airport ,Varanasi ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்