- திருத்தணி அரசு கல்லூரி
- திருத்தணி
- திருத்தணி சுப்பிரமணியசாமி அரசு கலைக் கல்லூரி
- சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை
திருத்தணி, டிச.20: திருத்தணி அருகே, சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், திருத்தணி சுப்பிரமணிய சாமி அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலையாக விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைப் பணிகளில் ஒரு பகுதியாக அரசு கலைக் கல்லூரிக்கு அரை கிலோ மீட்டர் தூரத்தில் சப்வே அமைக்கப்படுவதால் கல்லூரி மாணவர்கள் சுற்றிக் கொண்டு வந்து கல்லூரிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில் சப்வே அமைக்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, திருத்தணி அரசு கலைக் கல்லூரிக்கு எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ நேற்று சென்று மாணவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், டிஎஸ்பி கந்தன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறியாளர் ராஜய்யன் பங்கேற்றார். கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்கள் வசதிக்காக கல்லூரி பகுதியில் சப்வே அமைத்து தரப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், சாலை விரிவாக்க பணிகளுக்காக பேருந்து நிழற்குடை இடித்து அகற்றப்பட்ட நிலையில், மாணவர்கள் வசதிக்காக கல்லூரி அருகில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிழற்குடை அமைத்து தரப்படும் என்று எம்எல்ஏ சந்திரன் தெரிவித்ததால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
