×

எப்ஐஆரில் ரூ.50 ஆயிரம் குறைத்து பதிவு செய்த விவகாரம் பெண் இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி: எஸ்பி கண்டித்ததால் விபரீத முடிவு

போரூர், டிச.18: கவன குறைவால் எப்ஐஆரில் ரூ.50 ஆயிரம் குறைத்து பதிவு செய்ததை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி கண்டித்ததால் மனமுடைந்த பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் அதிகளவில் ரத்த அழுத்தம் மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி(52). இவர், கடந்த 2004ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக தமிழ்நாடு காவல்துறையில் தேர்வானார். தற்போது பதவி உயர்வு பெற்று அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவியிடம், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி ஆஷிஷ் ராவத் ஒப்படைத்தார். அவர் அந்த வழக்கை விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே வழக்கின் முதல் தகவல் அறிகையில் ரூ.6.10 லட்சம் என்பதற்கு பதில் ரூ.5.60 லட்சம் என கவனக்குறைவாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பொதுவாக வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இறுதி செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியிடம் அறிக்கை அளித்து அதை உறுதி செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி எஸ்பி ஆஷிஷ் ராவத்திடம் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பான அறிக்கையை சமர்ப்பித்தார். அப்போது வழக்கில் புகார்தாரர் கூறியபடி ரூ.6.10 லட்சத்திற்கு பதில் ரூ.5.60 என இருந்ததை கண்டுபிடித்து கேட்டுள்ளார். அதற்கு ஒவ்வொரு வழக்கும் புகார்தாரர்களின் வாழ்க்கை பிரச்னை. அதில், இப்படி தவறுதலாக பதிவு செய்தால் நீதிமன்றத்தில் யார் பதில் சொல்வது என கேட்டுள்ளார்.

அதன் பிறகு நேற்று முன்தினம் இரவு 8.45 மணிக்கு பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றும் எழுத்தர் ரவி, இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவிக்கு போன் செய்து, எஸ்பி உங்களை உடனடியாக பணி மாறுதலுக்கான கடிதத்தை கொடுக்கும்படி கூறியுள்ளார். அப்படி கடிதம் கொடுக்கவில்லை என்றால், உங்களுக்கு 3(பி) என்ற துறை ரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, வீட்டில் இருந்து 8 ரத்த அழுத்த மாத்திரைகள், 10 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கவனித்த அவரது தாய் அலறி அடித்துக்கொண்டு ரேணுகாதேவியை மீட்டு வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை முயற்சி தொடர்பாக ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எஸ்பி கண்டித்ததால் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பொருளாதார குற்றப்பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பெண் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவிக்கு பரமகுரு என்பவருடன் திருமணம் நடந்து ஒரு மகள் உள்ளார். மகள் சேலத்தில் உள்ள பெடரல் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2009ம் ஆண்டு முதல் ரேணுகாதேவி கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : SP ,Porur ,Wing SP ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...