பெரம்பூர், டிச.20: வியாசர்பாடியில் முன்விரோத தகராறில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து நண்பருக்கு அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (40). இவரது மனைவியின் செல்போன் எண்ணிற்கு அவ்வப்போது குறிப்பிட்ட எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர், வடிவேல் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் இவரது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அதனை வடிவேலின் நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து வடிவேல் அளித்த புகாரின்பேரில், எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், வடிவேலின் பெரியம்மா மகன் கார்த்திக் என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 2 வருடங்களுக்கு முன் வடிவேலுவின் மனைவி குளிக்க சென்றபோது அதனை கார்த்திக் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, இதை கண்டித்த அவர், இனிமேல் வீட்டு பக்கமே வரக்கூடாது என அவரை எச்சரித்துள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு வடிவேலுவின் மனைவியை பழிவாங்க கார்த்திக் இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வியாசர்பாடி ஜேஜேஆர் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
