×

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை, டிச.18: பூந்தமல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. 2ம் கட்ட திட்டத்தில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி முதல் போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.இதற்கிடையே, பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு முன்பு, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.

அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது. 90 கி.மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது பூந்தமல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான சிக்னல் கட்டமைப்புக்கு ஒன்றிய ரயில்வே வாரியம் இறுதி ஒப்புதலை அளித்துள்ளது. இதனால் பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் வரும் பிப்ரவரி இறுதிக்குள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: ‘பூந்தமல்லி – போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பாதை சிக்னல் தொழில்நுட்பத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சிக்னல் கட்டமைப்புக்கு ஒப்புதல் அளித்ததால் ஓரிரு நாட்களில் ரயில்வே வாரியம் வேகச்சான்றிதழ் அளிக்கும். சிக்னல் ஒப்புதல் கிடைத்த நிலையில் வேகச்சான்றிதழ் கிடைத்தால் மெட்ரோ ரயில் இயக்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். மேலும் பூந்தமல்லியில் இருந்து போரூர் வரை, ரயில்கள் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். பிப்ரவரி மாத இறுதிக்குள், பயணிகளுக்கு வடபழனி வரை போக்குவரத்து இணைப்பை வழங்க cள்ளோம். இதன் மூலம் அவர்கள் முதல் மற்றும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு இடையே மாறி பயணிக்க முடியும். எனவே, ரயில்கள் போரூரை கடந்து வடபழனி வரை செல்லும், ஆனால் போரூர் மற்றும் வடபழனிக்கு இடைப்பட்ட நிலையங்களில் அவை நிற்காது. போரூர் முதல் கோடம்பாக்கம் வரையிலான நிலையங்கள் ஜூன் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது அந்தப் பாதையில் சேவைகளை தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினர்.

Tags : Railway Board ,Poontamalli ,Borur Metro Rail Line ,Chennai ,Metro Rail Line ,Poonthamalli ,Borur ,
× RELATED ஆந்திர ஆலைக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி 15 டன் பறிமுதல்