சென்னை: தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுத் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் தூய்மைப் பணி, தோட்டப் பணி மற்றும் இதர வீட்டு வேலைகளில் கீழ்நிலை பணியாளர்களை ஈடுபடுத்தும் ‘ஆர்டர்லி’ முறை, தமிழகத்தில் பல்வேறு துறைகளில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், காவல் துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் 2022-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அதிகாரிகள் முழுமையாக அமல்படுத்தவில்லை என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அமர்வு குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், இதே அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழக டிஜிபி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார்.‘தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக இல்லை’என்று அதில் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள், “தமிழக சிறைத் துறை போலவே, காவல் துறையிலும் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். சக ஊழியரை ஆர்டர்லியாக வீட்டு வேலை செய்யப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் .அதேபோல, பணியில் இருப்பதாகக் கூறிவிட்டு, தனி்ப்பட்ட வேலைகளில் ஈடுபடும் போலீஸாரையும், போலீஸ் அதிகாரிகளையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது என்பது குறித்து இன்று தெரிவிக்க வேண்டும்,” என கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது “யாரையும் ஆர்டர்லியாக பயன்படுத்தக் கூடாது” என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக டிஜிபி தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் “தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை” என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் டிஜிபிக்கு பாராட்டையும் தெரிவித்தனர். இந்த வழக்கு ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
