மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, புயல் பாதுகாப்பு மையத்தை இடித்து விட்டு புதிய புயல் பாதுகாப்பு மையம் கட்டித் தர வேண்டும் என மீனவ மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மீனவ சமுதாய மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாமல்லபுரம் அடுத்த சாலவான்குப்பம், நெம்மேலி ஆகிய 2 இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு புயல் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டு, சில ஆண்டுகள் வரை செயல்பட்டு வந்தது. இது மீனவ மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது, அந்த புயல் பாதுகாப்பு மையங்கள் பாழடைந்து குடிநீர், கழிப்பறை, மின்சார வசதி இல்லாமல், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் உடைந்து காட்சி தருகிறது. புயல், பாதுகாப்பு மையத்தை இரவு நேரங்களில் குடிமகன்கள் பாராக மாற்றி, மது குடித்துவிட்டு மதுபாட்டில்களை உடைத்து கலாட்டா செய்வதாக கூப்படுகிறது. பகல் நேரங்களில் அவ்வழியாக பயணிக்கும் காதல் ஜோடிகள், பாதுகாப்பு மையத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
கடந்த, 2 வாரத்திற்கு முன்பு காதல் ஜோடிகள் அந்த கட்டிடத்திற்குள் உல்லாசமாக இருந்ததை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் அந்த ஜோடிகளை பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மீன் வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பலமுறை மீனவ மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் சினேகா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆய்வு செய்து, பாழடைந்த புயல் பாதுகாப்பு மையத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிதாக புயல் பாதுகப்பு மையம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
