திருச்சி, டிச. 19: ரங்கம், அரியமங்கலம் உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.1.20கோடியில் நாய்கள் பராமரிக்கும் பிரத்யேக கட்டிடங்கள் கட்டும் பணி துவங்க உள்ளது என்று திருச்சி மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் பணியின் அவசர, அவசியம் கருதி, கணக்கெடுப்பு அறிக்கையின் படி திருச்சி மாநகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரியும் 43 ஆயிரத்து 767 தெரு நாய்களில் 2 ஆயிரத்து 972 தெரு நாய்களுக்கு கருத்துடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. மேலும் 34 ஆயிரத்து 972 தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் ரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் ஆகிய 4 மையங்களில் நடந்தது.
சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள 227 அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள், 63 அரசு மருத்துவமனைகள் மற்றும் 208 தனியார் மருத்துவமனைகள், 3 பஸ் நிலையங்கள் மற்றும் 5 ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்த பின், தேவையான உணவுகள் வழங்கி பாதுகாத்து பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள முப்பரிமாண வண்ண மாதிரி வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய பராமரிப்பு மையங்களின் கட்டிடங்கள் ரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ.அபிஷேகபுரம் ஆகிய நான்கு மையங்களின் அருகில் பிரத்யேகமாக கட்டுவதற்கான கட்டிட பணிகள் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் பணிகள் துவங்கவுள்ளது.திருச்சி மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்கடிக்கான மருந்துகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் வெறி நாய் கடி சம்பந்தமான சிகிச்சைக்கான தொடர்பு அலுவலர் பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை அடங்கிய அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.தேசிய வெறிநாய் கடி நோய் தடுப்பு திட்டத்தின்படி சிகிச்சை பெறுபவர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை அட்டை வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களுக்கு கடிபட்ட நாள், 3ம் நாள், 7ம் நாள் மற்றும் 28ம் நாள் ஆகிய தினங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
