திருப்பூர்: குமரன் சிலை பகுதியில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தியதற்காக அண்ணாமலை உள்பட 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு வந்த குப்பைகள் பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் பாறைக்குழிகளில் கொட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து மாநகராட்சிக்கு சொந்தமான இடுவாய் சின்ன காளிபாளையம் பகுதியில் உள்ள இடத்தில் இயற்கைக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் சிமெண்ட் தரைத்தளம் அமைத்து திடக்கழிவு மேலாண்மை சட்ட விதிகளின்படி குப்பைகள் கொட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் சின்ன காளிபாளையம் கிராம மக்கள் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து குப்பைகளை கொட்டலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மாநகராட்சி குப்பைகளை கொட்ட சென்றபோது பொதுமக்கள் அதனை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று திருப்பூர் குமரன் சிலை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றார்.
ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதியளிக்காததால், காரில் இருந்தவாறே அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து, அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்றதாக அண்ணாமலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
