சென்னை: புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் எஸ்.ஆர்.ஜி.ராஜண்ணா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள இரங்கல் குறிப்பில், செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரும், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வானுமான S.R.G. ராஜண்ணா மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.
தமது அண்ணன் S.R.G. சம்பந்தமுடன் இணைந்து, 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள், மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல முக்கிய ஆன்மீக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றிய சிறப்புக்குரியவர்.
உலகெங்கும் ஒலிக்கும் தமது இசையால் இசைபட வாழ்ந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், இசையுலக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
