×

மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிடுக: வைகோ அறிக்கை

 

சென்னை: மழை வெள்ளத்தால் பயிர் சேதம் கணக்கீடு மேற்கொள்ள செயலி முறையை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை மற்றும் திட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து தமிழக அரசு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்காக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கீட்டு செயலி (CROP DAMAGE ASSESSMENT) மூலம் வேளாண் அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இதன்படி, பயிர் பாதிக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று, புல எண், உட்பிரிவு ஆகியவற்றை குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படத்தை ஜிபிஆர்எஸ் உதவியுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றப்பட்ட விவரங்களை கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோர் சரிபார்த்து அங்கீகரித்த பிறகே பயிர்கள் பாதிக்கப்பட்ட பட்டியலில் சேரும்.

இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த நடைமுறையால் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் பெற்றவர்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், பட்டா மாறுதல் செய்யப்படாத நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவுகளில் உள்ள இடங்களில் சாகுபடி செய்பவர்கள், குத்தகைதாரர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் கிடைக்காது என்ற நிலை உள்ளது.

“மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்க அரசு கொண்டு வந்துள்ள செயலி நடைமுறை, பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும் டெல்டா மாவட்டங்களில் சாத்தியமல்ல. “இந்த நடைமுறையில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட போதிய அலுவலர்கள் இல்லை. கடந்த குறுவை பருவத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை செயலி வாயிலாக கணக்கெடுத்ததில் பல விவசாயிகள் விடுபட்டு, இன்னமும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை” என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி, வேளாண் உதவி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், ஒரு ஏக்கர் சாகுபடி செய்வதற்கு ஒரு ஹெக்டேருக்கு அரசு ரூ.90 ஆயிரம் கடன் கொடுக்கிறது. ஆனால், பயிர்கள் பாதிக்கப்பட்டால் ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை போதுமானதல்ல, எனவே கடன் வழங்கும் தொகைக்கு ஈடான வகையில் நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கி விவசாய பெருமக்களின் விழி நீரை துடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Tamil Nadu ,
× RELATED கோயிலின் இடத்தில் இங்குதான் தீபம்...