ஈரோடு பிரசார கூட்டத்தில் பாஜ பற்றி வாய் திறக்காத விஜய்; முக்கிய பிரச்னைகள் குறித்தும் மவுனம்

 

ஈரோடு: கரூரில் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான பெருந்துயரத்திற்குப் பிறகு பெருந்துறையில் இன்று விஜய் பிரசாரம் செய்தார். ஈரோட்டில் விஜய் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக தவெக தலைவர் பிரசாரம் நடத்தி வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த ரோடு ஷோவில் 41 பேர் பலியாகினர். இது தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் 41 பேர் பலியான பெருந்துயரத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் அருகே தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரசார வாகனத்தில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது: பொதுவாக நல்ல காரியம் துவங்கும் முன்பு மஞ்சள் எடுத்து வைத்து, துவக்குவார்கள். நாம நல்லா இருக்கனும் என்பதற்காக நம் வீட்டு பெண்கள் மஞ்சள் புடவை கட்டித்தான் வேண்டிக்கொள்வார்கள்.

மஞ்சள் விளைகிற பூமி இந்த ஈரோடு பூமி. நான், எல்லாவற்றையும் விட்டுவிட்டு, மக்களுக்காக வந்துள்ளேன். அப்படி வந்துள்ள இந்த விஜயை, மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். வாழ்நாள் முழுவதும் நான் மக்களுக்கு நன்றியுடன் இருப்பேன். அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தினால், இன்னும் 3 மாவட்ட மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். ஈரோடு பெரியாரிடம் இருந்து நாங்கள் கொள்கைகளை எடுத்துக்கொண்டோம். அவரை பின்தொடர்ந்த அறிஞர் அண்ணா, எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் வழிமுறைகளை எடுத்துக்கொண்டோம். அண்ணாவும், எம்ஜிஆரும் குறிப்பிட்ட யாருக்கும் சொந்தம் அல்ல. அவர்கள், எல்லோருக்கும் சொந்தம். மக்கள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். என் மீது எல்லையில்லா நம்பிக்கை வைத்துள்ள மக்கள்தான் எனக்கு துணை. 2026ல் தேர்தல் களத்தில் இருப்பவர்களை மட்டும்தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க மாட்டோம். ஏன்னா… எங்களுக்கு நிறைய வேலை இருக்குது.

நான், சலுகைகளுக்கு எதிரானவன் அல்ல. இலவசம் கொடுக்கக்கூடாது என்பதுதான் எங்களது நிலைப்பாடு. மக்களது வாழ்வாதாரம் உயர வேண்டும். அப்பதான் பொருளாதாரம் உயரும், நாடும் உயரும். இதற்கான சூழலை அரசு அமைத்து தர வேண்டும். இப்படி செய்கிற அரசுதான், நல்ல அரசாங்கம். சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இவ்வாறு விஜய் பேசினார். புதுச்சேரியில் பேசிய கூட்டத்திலும் சரி, தற்போது பெருந்துறையில் பேசிய கூட்டத்திலும் சரி பாரதிய ஜனதாவையோ, ஒன்றிய அரசையோ விஜய் விமர்சனம் செய்து பேசவில்லை. அதோடு முக்கியமான மக்கள் பிரச்னைகளான எஸ்.ஐ.ஆர்., 100 நாள் வேலை திட்டம் உட்பட முக்கிய திட்டங்கள் குறித்து விஜய் எதுவும் பேசவில்லை. அதோடு, திருப்பரங்குன்றத்தில் மதப்பதற்றத்தை ஏற்படுத்தும் விவகாரத்திலும் அவர் மவுனம் சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் நடிகர் விஜய், மதியம் 11.5 மணிக்கு பேச துவங்கினார். 12.28 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். மொத்தம் 32 நிமிடம் மட்டுமே பேசினார். பேச்சு முடிவில், தனது செல்போனில், கூட்டத்தினரையும் சேர்த்து, செல்பி எடுத்துக்கொண்டார். விஜய் பேசி முடித்ததும் அவருக்கு தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் ஆள் உயர வெள்ளி செங்கோல் நினைவுப்பரிசு வழங்கினார். அதை விஜய் தனது வலது கையில் தூக்கிப்பிடித்து, கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் காண்பித்தார். ஸ்பீக்கர் கம்பத்தில் ஏறிய தொண்டர்
விஜய் பேசிக் கொண்டிருந்த போது அங்கிருந்த ஸ்பீக்கர் பாக்ஸ் கட்டியிருந்த கம்பத்தில் அத்துமீறி ஏறிய தொண்டர் ஒருவர் விஜயை பார்த்து ‘பிளையிங் கிஸ்’ கொடுக்க முயன்றார்.

தொண்டரை பார்த்த விஜய் தனது பேச்சை பாதியில் நிறுத்தி விட்டு உடனே கீழே இறங்குமாறு எச்சரிக்கை விடுத்தார். அதிலிருந்து கீழே இறங்கிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அழைத்து சென்றனர்.விஐபி பாஸ்-தொண்டர்கள் அதிருப்தி ஈரோட்டில் இன்று நடந்த விஜய் பிரசார பொதுக்கூட்டத்தில் கியூஆர் கோடு மற்றும் விஐபி பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரகசியமாக விஐபி பாஸ் இல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஐபி பாஸ் வழங்கி சிறப்பு வழியில் அனுமதி அளித்தனர். இதனால் கூட்டத்துக்கு வந்திருந்த தவெக தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

 

Related Stories: