பெரம்பலூர், டிச. 18: கிளைச் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் தரமாக உள்ளதா என்பது குறித்து, பெரம்பலூர் கிளைச் சிறையில், நீதிபதி, கலெக்டர், எஸ்பி உள்ளிட்ட ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி, தமிழ்நாடு சிறை துறை இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தலின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் கிளை சிறையில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு அம்சங்கள், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, மாவட்டக் கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோர் தலைமையிலான ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்றுமுன்தினம், பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பத்மநாபன், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் பெரம்பலூர் கிளைச் சிறைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிளைச்சிறையில் உள்ள சிறைவாசிகளிடம் உரையாடிய நீதிபதி, கலெக்டர், எஸ்பி ஆகியோர் கிளைச் சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் தரமாக உள்ளதா? மனநல ஆலோசனை வழங்க மருத்துவர்கள் முறையாக வருகை தருகின்றார்களா? சிறைக் கைதிகள் தங்கள் குடும்பத்தினரிடம் உரையாட காணொளி அறை (வீடியோ கான்பிரன்சிங்) உள்ளதை பயன்படுத்துகின்றீர்களா? உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், கிளைச் சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகள், தண்டனை சிறைவாசிகள் மற்றும் காவலர்கள், சமையலர், பணியாளர்கள் உள்ளிட்டோர் விவரங்களை பராமரிக்கும் பதிவேடுகளையும், ஆவண பாதுகாப்பு அறைகளையும், சிறைகளை அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து சிறைக் கைதிகளுக்கு உணவு சமைக்கும் கூடத்தை பார்வையிட்டு, அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப் பார்த்தனர். உணவு வகைகள் அரசு அட்டவணைப்படி வழங்கப்படுகிறதா? தரமாக உள்ளதா? என்பது குறித்தும் சிறையில் உள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வுகளின் போது ஆய்வுக் குழு உறுப்பினர்களான பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர் அனுசுயா, பெரம்பலூர் மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கண்ணன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் குணசேகரன், மனநல மருத்துவ அலுவலர் அசோக் உள்ளிட்ட அலுவலர்களும், கிளைச் சிறை கண்காணிப்பாளர் சுந்தராஜன், சிறை முதல் நிலை காவலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
