×

சிறைவாசிகளுடன் உரையாடல் மார்கழி மாத அதிகாலை வேளையில் கோலம் போடும் பெண்கள் உஷாராக வேண்டும்

குன்னம், டிச. 18: மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க வீட்டு வாசலில் வண்ணகோலமிடும் பெண்கள் உஷாராக இருக்கவேண்டுமென போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரம். அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு இறைவனை வணங்கினால் தேவர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய துன்பங்களை போக்கி இன்பம் தருவார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

குறிப்பாக வீட்டிற்கு அழகு சேர்ப்பது மட்டுமில்லாமல் அறிவியல் ரீதியில் நிறைய நன்மைகளை உள்ளடக்கியதாக இந்த மார்கழி வண்ணகோலங்கள் திகழ்கிறது. இதனாலேயே மற்ற நாட்களை காட்டிலும் இம்மாதத்தில் பெண்கள் அதிகாலை வேளையிலேயே எழுந்து குளித்து விட்டு, வீட்டு வாசலில், மணிக்கணக்கில் வண்ண, வண்ண கோலமிடுவர். தற்போது மார்கழி மாதம் தொடங்கி உள்ளதை தொடர்ந்து மார்கழி மாதத்தில், வீட்டு வாசலில் கோலமிடும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவதை திருடர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இது குறித்து குன்னம் போலீசார் கூறும்போது, மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் பெண்கள் பெரும்பாலும் தனியாக நின்று கோலமிடுவர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நைசாக பேச்சு கொடுத்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி நகையை பறிப்பது. முகவரி கேட்பது போல் பாவனை செய்து நகையை பறிப்பது. ரூபாய் நோட்டை போட்டுவிட்டு அது உங்களுடைய பணமா என்று பாருங்கள் எனக் கூறி, பெண்கள் நகையை எடுக்க குனியும் போது நகையை பறிப்பது, இன்னும் ஒருபடி மேலே சென்று கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை பறிப்பது இப்படி பலவகைகளில் குற்றச்சம்பவங்களை செயின் பறிப்பு திருடர்கள் அரங்கேற்றுவர். தற்போது மார்கழி மாதம் பிறந்துள்ள நிலையில் கோலமிடும் பெண்களை குறிவைத்து இது போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

எனவே அதிகாலை வேளையில் எழுந்து கோலம் போடும் பெண்கள், மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருந்து கோலமிட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தனியாக நின்று கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். நகை அணிந்திருந்தால், கழுத்தை சுற்றி துணியை சுற்றி கொள்ள வேண்டும். மேலும் கணவர், உறவினர்கள் என யாரையாவது உதவிக்கு அழைத்து வந்து கோலமிட மிகவும் பாதுகாப்பானது. குறிப்பாக ஆண்களை அருகில் நிற்க வைத்து, தெருக்களின் ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க செய்தால் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும். எனவே மார்கழி மாத அதிகாலை வேளையில் கோலம் போடும் பெண்கள் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Tags : Margazhi ,Kunnam ,
× RELATED காவல்துறை எச்சரிக்கை எறையூர்...