பள்ளிப்பட்டு,டிச.16: ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு அருகே ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்க அணைக்கு உபரிநீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால், அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெளியேற்றினர்.
இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பள்ளிப்பட்டு அருகே ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
