×

வேலூர் விஐடியில் 4 நாள் மாநாடு தொடக்கம்; பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் வலுவான நம்பிக்கை நானோ தொழில்நுட்பம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சு

 

வேலூர்: நானோ தொழில்நுட்பம் என்பது பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் வலுவான உலகளாவிய நம்பிக்கை என்று விஐடியில் நடந்த 4 நாள் மாநாடு தொடக்க விழாவில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். வேலூர் விஐடியில் 3வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. விழாவுக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு, முக்கியமான மாநாடு. இதில் பங்கேற்க 20 நாடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் இருந்து 300 பேர் வந்துள்ளனர். உலகம் முழுவதில் இருந்தும் கருத்தாளர்கள் வந்திருப்பது மகிழ்ச்சி. அட்வான்ஸ்டு நானோ பொருட்கள், நானோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள் ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்ப பயன்பாடுகள் போன்ற தலைப்புகளில் பேச உள்ளனர். இந்த மாநாடு உலகம் முழுவதில் இருந்து மக்களை ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டில், ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

சிறப்பான பங்களிப்பை வழங்கிய இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்த நாடு ஒரு முன்னேறிய நாடாக மாற வேண்டும். அது உயர்கல்வி மூலம் மட்டுமே சாத்தியமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரம், கல்வி முன்னுரிமையாக இருக்கவேண்டும். எதிர்காலத்தில் அது செய்யப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: நானோ தொழில்நுட்பம், நம் உலகின் அறிவியல் மற்றும் பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் வலுவான உலகளாவிய நம்பிக்கையை இந்த மாநாடு பிரதிபலிக்கிறது. நானோ தொழில்நுட்பம் என்பது, வெறும் அறிவியல் ஒழுக்கம் அல்ல, அது ஒரு புரட்சி. மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ மருந்து, சுகாதார பராமரிப்பு பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள், சூப்பர் மின்தேக்கிகள் மற்றும் பேட்டரிகள் உட்பட உயர் செயல்திறன் கொண்ட ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஆகும்.

அறிவார்ந்த மற்றும் நிலையான போக்குவரத்திற்கான ஸ்மார்ட் உணர்விகள், சூரிய ஒளிமின்னழுத்தங்கள் மற்றும் ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களுக்கான திறமையான பொருட்கள், நானோ-அளவிலான கழிவு மறுசுழற்சி மூலம் சுழற்சி பொருளாதார தீர்வுகள் ஆகியவற்றிற்கு இது உதவுகிறது. தமிழ்நாடு இந்த யதார்த்தத்தை அங்கீகரிக்கிறது. எனவே நாங்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தை, எங்களின் வளர்ச்சி உத்தியின் மையமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2வது பெரிய பங்களிப்பாளராக தமிழ்நாடு திகழ்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளை சமூக தேவைகளுடன் இணைக்கவும், புத்தாக்கத்தை உண்மையான உலக விளைவுகளாக மாற்ற வேண்டும்.

அடிப்படை கண்டுபிடிப்புகளில் இருந்து உலகளாவிய செயலாக்கம் வரை உங்கள் பயணத்திற்கு, தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அமெரிக்கா எம்ஐடி கல்வி நிறுவன பேராசிரியரும், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியுமான மவுங்கி பவெண்டி கலந்து கொண்டு பேசினார். மாநாட்டில் விஐடி துணைத்தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குனர் சந்தியாபென்டரெட்டி, துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநாடு ஒருங்கிணைப்பு தலைவர் நிர்மலா கிரேஸ் வரவேற்றார். பேராசிரியை விமலா நன்றி கூறினார்.

 

Tags : Vellore VID ,Transport Minister ,Vellore ,Sivasankar ,VID ,International Nanoscience ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி...