மகிமைகள் நிறைந்த மார்கழி மாதம்!

மார்கழியை வரவேற்போம்!

மார்கழி பிறந்துவிட்டது. நாடெங்கும், ஊரெங்கும், வீதி எங்கும், ஏன் ஒவ்வொரு இல்லங்களிலும், ஆன்மிக ஒளி வீசப்போகும் மாதம் மார்கழி. விடிகாலையில் ஒலிக்கும் பட்சி ஜாலங்களோடு, மனம் குளிர வைக்கும் மகத்தான தெய்வீக இசை, செவிகளை நிறைத்து, மனதில் புகுந்து மகிழ்வாக்கும் மாதம். 12 மாதங்களில் இதற்கு இணையான மாதம் இல்லை. பனி விடியலில், வீதிகளில், பெண்கள் சாணம் தெளித்து, பறங்கிப் பூக்களை வைத்தும், வாசல் மாடத்தில் விளக்கு ஏற்றி வைத்தும் அழகுபடுத்துகிறார்கள்.

மாதங்களில் நான் மார்கழி

சகல உபநிடதங்களின் சாரம் பகவத் கீதை என்பார்கள். அந்த பகவத் கீதை அவதரித்த மாதம் மார்கழி மாதம். மற்ற எல்லாச் சிறப்புகளை விடபெரும் சிறப்பு இது. பகவத் கீதையில் பத்தாவது அத்தியாயம் விபூதி யோகம் என்பது. அதிலே பல்வேறு பொருள்களில், உயர்வான பொருளைக் குறிப்பிட்டு, அந்த உயர்வான பொருளாக நான் இருக்கின்றேன் என்று பகவான் கண்ணன் சொல்லிக் கொண்டே வருகின்றான். சேனாதிபதிகளிலே நான் முருகன்; ருதுக்களிலே நான் வசந்தம்; தருக்களிலே நான் அரசமரம்; இப்படி சொல்லிக் கொண்டே வந்த கண்ணன் மாதங்களைப் பற்றி வருகின்ற பொழுது ‘‘மாதங்களில் நான் மார்கழி” (மாஸானாம் மார்க்க சீர்ஷோகம் கீதை ஸ்லோகம்) என்று அறிவிக்கின்றான். அப்படி யானால் என்ன பொருள்? மார்கழி மாதம் வேறு; பகவான் கண்ணன் வேறு கிடையாது. இந்தச் சிறப்பு வேறு மாதங்களுக்கு கிடையாது.

இந்த மாதத்தில் ஏன் திருப்பாவை?

மனிதர்களின் ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மனிதர்களின் ஒவ்வொரு இரண்டு மாதமும் தேவர்களுக்கு இரண்டு மணி நேரம். அந்த வகையில் தேவர்களின் சூரிய உதயமாகிய ஆறு மணி என்பது தை மாதத்தைக் குறிக்கிறது. பர தெய்வமான ஸ்ரீமன் நாராயணனை, தேவர்கள் பூஜிக்கும், பிரம்ம முகூர்த்தமான, காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரத்தை, தை மாதத்தின் முந்திய மாதமாகிய, மார்கழி மாதம் குறிக்கிறது. இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடுதான் “மார்கழி வழிபாடு” என்று கருதப்படுகிறது. இது தவிர ‘‘மாதங்களில் நான் மார்கழியாக’’ இருக்கின்றேன் என்றான் கண்ணன் கீதையில். சொல்லியிருப்பதை அறிந்த ஆண்டாள். கண்ணனை அடைய, கண்ணனுக்குப் பிடித்த மார்கசீர்ஷ (மார்கழி) மாதத்தில், பாவை நோன்பை கடைப்பிடித்தாள். மார்கழி என்பதற்கு இறைவனை அடையும் மார்க்கம்(வழி) காட்டும் மாதம் எனும் ஒரு பொருளும் உண்டு.

மார்கழியின் சிறப்புக்கு இத்தனை காரணங்களா?

மார்கழி மாதத்தின் சிறப்பை வைணவ உரையாசிரியர்கள் விளக்கும் பொழுது சில காரணங்களை கூறுகின்றார்கள்.
* பகவானோடு தங்களைக்கூட்டி வைத்த மாதம்
*மழை விழுந்து மனம் குளிரும் மாதம்.
3. மலை உச்சியில் கிடந்த பயிர்களும் நிலத்தில் கிடந்த பயிர்களும் முளைவிடும் மாதம்.
* அதிக குளிரும் அதிக உஷ்ணமும் இல்லாத மாதம்.
* வாசுதேவன் என்கின்ற மரத்தின் நிழல் துணை இருக்கும் மாதம்.
* ஒரு நாளைக்கு பிரம்ம முகூர்த்தம் போல வருஷத்திற்கு இந்த மாதம் பிரம்ம முகூர்த்தம் என்பதால் சத்வ குணம் (சாத்வீகம்) தலை எடுக்கும் மாதம் என்று காரணங்களை அடுக்குகின்றார்கள்.

அறிவு சுடர்விடும் மாதம்

ஆகம விதிகள் இந்த மாதத்தில் விடியற்காலையில் எழுந்து பெருமாளை வழிபட்டால் சாத்வீகமான குணமும், தேக ஆரோக்கியமும், தெளிவான ஞானமும், மனச்சாந்தியும் அடையலாம் என்று கூறுகிறது. இந்த மாதத்தில்தான், நம்முடைய மனதுக்குக் காரணமான சந்திர பகவான் பகவானின் இதயத்திலிருந்து தோன்றியதாக புருஷ சூக்தம் குறிப்பிடுகிறது. (சந்த்ரமா மனசோ ஜாத:) சந்திரனை அறிவு (மதி) என்ற சொல்லால் குறிப்பிடுவதும் உண்டு. சந்திரன் தோன்றினான் என்று சொன்னால், அறிவும் ஞானமும் தோன்றியது என்று பொருள். எனவே இந்த மாதத்தில் சந்திரன் தோன்றினான் என்கிற குறிப்பு ஞானம் தோன்றும் என்பதற்காக அடையாளக் குறிப்பாகும். எனவே மார்கழி மாதத்தின் வழிபாடுகள் மெய்ஞ்ஞானத்தைக் கொடுக்கும்.

கேசவ மாதம்

வைணவ மரபில் பன்னிரண்டு மாதங்களும் பகவானின் சிறப்பான 12 திருநாமங்களால் வழங்கப்படுகிறது. அதில் மார்கழி மாதம் கேசவன் என்ற திருநாமத்திற்கு உரியது. கேசவன் என்ற சொல்லுக்கு அழகான தேசங்களை உடையவன் என்று ஒரு பொருள். இன்னொரு பொருள் மனதின் அச்சங்களை அகற்றுபவன் (கேசவக்லேச நாசனா:) என்று பொருள். உடலின் 12 அங்கங்களைத் தொட்டு ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு நாமத்தைச் சொல்வார்கள். இதை அங்க வந்தனம் என்று சொல்வார்கள். அதில் முதல் நாமம் கேசவ நாமம். கேசவன் என்ற நாமத்தை சொன்னாலே இடர் கெடும், யமன்கூட விலகிவிடுவானாம் என்பது ஆழ்வார் வாக்கு (கெடும் இடாராய வெல்லாம் கேசவா என்ன, நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்)

எனவேதான் ஆண்டாளும் திருப்பாவையை முடிக்கும் போது, ‘‘வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை’’ என்று கேசவன் நாமத்தோடு நிறைவு செய்தாள். காரணம் நாம் என்ன நினைத்து மார்கழி மாதத்தின் 30 நாட்களும் வழிபாடு நடத்தினோமோ அது வழிபாட்டு நிறைவில் நிறைவேறும்.

பீடுடைய மாதம்

மார்கழி மாதத்தை “பீடை மாதம்’ என்று அறியாதவர்கள் சொல்லுவார்கள். ஆனால் மார்கழி மாதம் பீடுடைய மாதம். ஆன்மிகத்திற்கே உரிய மாதம். பெரும்பாலும் மாதத்தின் ஓரிரு நாளே ஆன்மிக முக்கியத்துவம் பெறும். ஆனால், மார்கழி மாதத்தின் முப்பது நாள்களும் ஆன்மிக முக்கியத்துவம் பெறும். பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் எந்தக் காரியமும் மிகச்சீரிய பலனைத் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் எந்தவித நாள், வார, திதி தோஷங்கள் இல்லை. பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் வழிபாடு நூறு மடங்கு புண்ணிய பலனை தரும் என்பதால், தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமாகிய விடிகாலை நேரத்தை, மார்கழி மாதமாக வைத்தார்கள்.

திருப்பாவை மாதம்

தமிழுக்கு ஏற்றம் தரும் மாதம் மார்கழி மாதம். இந்த மாதத்தில் தினம் காலையில் பாடுவதற்கு என்றே, 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் ஒரு தமிழ் நூலினை இயற்றித் தந்தார். அதுதான் திருப்பாவை. மார்கழி மாதத்தை “திருப்பாவை மாதம்” என்று சொல்வார்கள். திருப்பாவை மார்கழி என்ற மாதத்தின் பெயரோடு (“மார்கழி”த் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்) என்றே தொடங்குகிறது. திருப்பாவை பிரபந்தத்தில் 30 பாசுரங்கள் இருக்கின்றன. வைணவர்களிடம் ஒரு வழக்கம் உண்டு அவர்கள் மார்கழி மாதத்தின் தேதிகளைக் குறிப்பிடுகின்ற பொழுது, மார்கழி 1, 2 என்று குறிப்பிடுவதில்லை. திருப்பாவையின் பாசுர தொடக்க வார்த்தையை வைத்துத் தான் குறிப்பிடுவார்கள். உதாரணமாக, மார்கழி 1 என்று குறிப்பிடாமல், ‘‘மார்கழித் திங்கள்’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி இரண்டாம் தேதியை, திருப்பாவை இரண்டாம் பாசுர தொடக்கமான ‘‘வையத்து வாழ்வீர்காள்’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி மூன்றாம் தேதியை ‘‘ஓங்கி உலகளந்த’’ என்று குறிப்பிடுவார்கள். மார்கழி 30ஆம் தேதியை “வங்கக் கடல்” என்று குறிப்பிடுவார்கள்.

பூமாலையும் பாமாலையும்

ஆண்டாள் இரண்டு காரியங்களைச் செய்தாள். முதல் காரியமாக அவனுக்கு பல்வேறு வண்ண மலர்களால் மாலை கட்டி, அந்த எம்பெருமானுக்கு பொருத்தமாக இருக்குமா என்பதற்காக, ஒருமுறைதான் சூடிப் பார்த்து, அழகாக இருக்கும் என்று தெரிந்த பின்னால், எம்பெருமானுக்கு அந்த மாலையை அணிவித்தாள். பொதுவாக இறைவனுடைய சூடிக்களைந்த மாலையைத் தான் பக்தர்கள் பிரசாதமாக விரும்புவார்கள்.

ஆனால் ஆண்டாள் பக்தியினால் சூடிக்கொடுத்த மாலையை இறைவன் விரும்பி சூடிக்கொண்டான். இதனால் ஆண்டாளுக்கு “சூடிக்கொடுத்த சுடர்க்கொடி” என்று பெயர். இப்பொழுதும் திருமலை உற்சவத்தில் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை வேங்கடவனுக்குப் போகிறது. இரண்டாவதாக தமிழிலே அழகான இரண்டு பிரபந்தங்களைப் பாடிக் கொடுத்தாள்.

ஒன்று திருப்பாவை, இரண்டு நாச்சியார் திருமொழி. ஒன்று பூமாலை. இன்னொன்று பாமாலை. ஆண்டாள் சூடிக் கொடுத்த பூ மாலை, இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவள் பாடிக் கொடுத்த பாமாலையான திருப்பாவை பல்லாயிரம் வருடங்களாக நம்மிடத்தில் அனுஷ்டானத்தில் இருக்கிறது.

எத்தனை ஜெயந்தி உற்சவங்கள் தெரியுமா?

திருப்பாவை தவிர வேறு எந்தச் சிறப்பும் மார்கழிக்கு இல்லையா என்று கேட்கலாம். எத்தனையோ சிறப்புக்கள் இருக்கின்றன. மார்கழி மாதத்தில்தான் பரசுராமர் அவதரித்த (மார்கழி புனர்பூசத்தில்) பரசுராம ஜெயந்தி உற்சவம் வருகிறது. மார்கழி மாதத்தில்தான் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடிய தொண்டரடிப் பொடியாழ்வார் (மார்கழி கேட்டை) அவதரித்தார். ராமானுஜருக்கு குருவாக இருந்து அவருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்த பெரிய நம்பிகள் எனும் ஆச்சாரியார் அவதரித்தார். ஆசாரிய இருதயம் என்ற அற்புதமான நூலையும், சில பிரபந்தங்களுக்கு ஆச்சர்யமான உரையையும் எழுதிய அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் (மார்கழி அவிட்டம்) அவதரித்தார். கூர நாராயண ஜீயர் அவதரித்தார். மதுரையின் ஜோதி என்று புகழ்பெற்ற ஸ்ரீமன் நடன கோபால நாயகி சுவாமிகள் (மார்கழி மிருகசீரிஷம்) அவதரித்தார். இப்படி பற்பல மகான்களின் அவதார நிகழ்வுகள் நடந்த மாதம் மார்கழி.

இராப்பத்து

வளர்பிறை ஏகாதசி முதல் பஞ்சமி முடிய 10 நாட்கள் நடத்த வேண்டிய உற்சவத்திற்கு ‘‘மோட்ச உற்சவம்’’ என்று பெயர். அத்யயன உற்சவம் பகலில் செய்ய வேண்டிய உற்சவம். மோட்ச உற்சவம் இரவில் செய்யவேண்டிய உற்சவம். இந்த உற்சவங்களில் பகவானை மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணி உற்சவங்களை நடத்த வேண்டும். ஏகாதசியன்று பகவத் சந்நதிகளில், வேதங்களை ஆரம்பித்து, பத்து நாட்கள் தொடர்ச்சியாக நடத்தி, பத்தாவது நாளில் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது ஆகமங்களில் சொல்லப்பட்ட விதி. திருமங்கையாழ்வார் காலம் வரையிலும் இந்த விதிப்படியே நடந்தது. திருமங்கை ஆழ்வார் காலத்தில் வேதங்களையும் ஸ்தோத்ரங்களையும் தவிர, வேறு எதுவும் பகவான் முன் சமர்ப்பிக்கப்படவில்லை.

விதியை மாற்றிய திருமங்கையாழ்வார்

நம்மாழ்வார் பாடிய நான்கு வேதங்களுக்கு நிகரான நான்கு பிரபந்தங்களுக்கு, ஆறு அங்கங்களாக ஆறு பிரபந்தங்களை அருளிச் செய்தவர் திருமங்கை ஆழ்வார். ஆழ்வார்களில் கடைக்குட்டி ஆழ்வார். நம்மாழ்வாரின் தமிழின் மீது ஆராக்காதல் கொண்ட திருமங்கை ஆழ்வார், அதை எப்படியாவது ஆலய நிகழ்வுகளில் பெருமாள் திருச்செவி கேட்கும்படி செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த மாதம்தான் மார்கழி. தேர்ந்தெடுத்த உற்சவம்தான் திருஅத்யயன உற்சவம். திருமங்கை யாழ்வார்தான் இந்த உற்சவத்தின் அமைப்பை முதன்முதலில் மாற்றியவர். நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதத்திற்கு நிகராக ஸ்ரீரங்கத்தில் ஒலிக்கச் செய்தவர் திருமங்கை ஆழ்வார். அவர்தான் திருவாய்மொழித் திருநாள் என்று ஆரம்பித்து வைத்தார். அது இப்போது இராப்பத்து திருநாளாக தொடர்கிறது.

பகல் பத்து

இடையில் மறைந்து போன ஆழ்வார்களின் பாசுரங்களை எல்லாம் தொகுத்து நாலாயிர திவ்ய பிரபந்தமாக அமைத்தவர் நாதமுனிகள். திருமங்கையாழ்வார் காலத்தில் திருவாய்மொழிக்கு ஏற்றம் தந்து அவர் நடத்தி வைத்த திருவாய்மொழி உற்சவத்தை மறுபடியும் புனரமைத்தார் நாதமுனிகள். மற்றைய ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு ஏற்றம் தர, வளர்பிறை ஏகாதசிக்கு முன்னால், அதாவது வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் உள்ள 10 நாள்களிலும் பகல் நேரங்களில் ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் ஓத ஏற்பாடு செய்தார். அவர்கள் செய்த அருந் தமிழுக்கு நன்றி செலுத்தும் கடமையாக அந்த ஏற்பாடு இருக்கும் என்று எண்ணி தொடங்கி வைத்தார். அதோடு திருமங்கையாழ்வார் கையில் தாளத்தோடு தேவகானத்தில் பாடியும், ஆடியும், இறைவனை வழிபட்ட சிறப்புகளையும் எண்ணி, முத்தமிழாலும் மார்கழியில் இறைவனை வணங்க வேண்டும் என்று இசையிலும் நடனத்திலும் வல்லவரான அரையர்களை ஏற்படுத்தி பயிற்சியளித்து “அரையர் சேவை”யை தொடங்கி வைத்தார்.

வைகுண்ட ஏகாதசி என்பதன் பொருள் இதுதான்

மார்கழி மாதத்தில் இரண்டு ஏகாதசி உற்சவங்கள் வருகின்றன. அதில் முதல் ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். மார்கழி வளர்பிறை ஏகாதசிக்கு வைகுண்ட ஏகாதசி என்று பெயர். மற்ற எந்த ஏகாதசியில் விரதம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அனேகமாக எல்லோருமே வைகுண்ட ஏகாதசி விரதத்தையும் வழிபாட்டையும் கட்டாயம் அனுசரிப்பார்கள்.

அன்று திருமால் ஆலயங்களில் விடிகாலை வேளையில் பரமபத வாசல் திறக்கும். பெரும்பாலான கோயில்களில் வடக்குப் பக்கத்தில் ஒரு வாசல் இருக்கும். அந்த வாசலுக்குதான் பரமபத வாசல் என்று பெயர். மற்றைய நேரங்களில் சாத்தியிருக்கும் அந்த வாசல் ஏகாதசி விடியல் காலையில் திறக்கப்படும். அந்த வாசல் வழியாக அடியார்கள் புடை சூழ பெருமாள் வெளிப்பிரகாரத்துக்கு வருவார். அன்று சில கோயில்களில் கருட சேவையும் நடைபெறும். மனிதர்களாக பிறந்து தன்னிடம் கடைசி வரை மாறாத பக்தி கொண்டு, நெறிப்படி வாழ்ந்த அடியார்களை, அவர்கள் உலக வாழ்வு நீத்த பின்னால், தானே வந்து, தன்னுடைய உலகான மோட்ச உலகத்துக்கு, அதாவது பரமபதத்திற்கு, பரமபத வாசல் வழியாக அழைத்துச் செல்வதை நடித்துக் காட்டுவதுதான் வைகுண்ட ஏகாதசியின் உற்சவ அமைப்பு.

திருவெம்பாவை மாதம்

நம் பாரத தேசத்தின் இரண்டு பெரும் சமயங்கள் சைவமும் வைணவமும். சில உற்சவங்களும் பண்டிகைகளும் சைவத்திலும் வைணவத்திலும் தனித் தனியான நேரங்களில் நடக்கும் உற்சவங்களாக சிறப்பு பெற்றிருந்தாலும், பொதுவாக சில உற்சவங்கள் அல்லது மாதங்கள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு மாதம் தான் மார்கழி மாதம். வைணவத்தில் மார்கழி மாதத்தை திருப்பாவை மாதம் என்று சொல்லி ஆண்டாளின் திருப்பாவையை நாள்தோறும் விடியற்காலையில் ஓதிச் செல்வதை போல, சைவர்கள் மாணிக்கவாசகர் அருளிய திருவெம் பாவையையும், திருப்பள்ளி எழுச்சியையும் நாள்தோறும் ஓதிச் செல்வார்கள். எனவே இந்த மாதம் சைவர்களுக்கு திருவெம்பாவை மாதம் ஆகும்.

ஆருத்ரா தரிசனப் பெருவிழா

மார்கழி எத்தனை சைவ அடியார்கள் குரு பூஜை மாதம் தெரியுமா? 63 நாயன்மார்களின் ஐந்து நாயன்மார்கள் குரு பூஜை மாதம் இது. (சைவத்தில் நாயன்மார்கள் முக்தி பெற்ற நட்சத்திரத்தில் குரு பூஜை விசேஷமாக கொண்டாடப்படுகிறது) அந்த வகையில், மானகஞ்சார நாயனார், சாக்கியநாயனார், வாயிலார் நாயனார், சடையநாயனார், இயற்பகை நாயனார் எனும் ஐந்து நாயன்மார்களின் குருபூஜை நடக்கும் மாதம் இது.

எப்படி வைணவத்தில் கோயில் என்றழைக்கப்படும் திருவரங்கத்தில் மார்கழியில் பெருவிழா நடைபெறுகிறதோ, அதைப் போலவே கோயில் என்று சைவத்தில் அழைக்கப்படும் தில்லையில் (சிதம்பரம்), கூத்தனுக்கு பெருவிழா இம்மாதத்தில்தான் நடைபெறுகிறது. சிவனுக்கு உகந்த மார்கழி திருவாதிரையில் நடைபெறும் இப்பெருவிழாவுக்கு ‘‘திருவாதிரைத் திருநாள் விழா’’ என்றும் ‘‘ஆருத்ரா தரிசனப் பெருவிழா’’என்றும் பெயர்.

Related Stories: