மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3ம் தேதி 90ஐ தாண்டி சரிவடைந்தது. இந்நிலையில், நேற்று ரூ.91ஐ தாண்டி புதிய சரிவை சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று முன்தினம் வர்த்தகம் முடிவில் 29 காசுகள் சரிந்து ரூ.90.78 ஆக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை ரூ.90.87 என சரிவுடனேயே துவங்கியது. வர்த்தக இடையில் ரூ.90.76 வரை வலுப்பெற்று, அதிகபட்சமாக ரூ.91.14 என்ற உச்சபட்ச சரிவை எட்டியது. ஆனால் வர்த்தக முடிவில் ரூ.91.01 ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத புதிய சரிவை சந்தித்துள்ளது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘‘டாலர் வலுவிழந்து, கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டபோதும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது. மேலும் சரிவை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது, என்றனர். அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பதவியேற்றதில் இருந்து, வரி விதிப்பு உள்ளிட்ட வர்த்தக ரீதியாக அவர் எடுத்த பதிலடி நடவடிக்கைகள் இந்திய ரூபாய் மதிப்பை வெகுவாக பாதித்தது. 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததில் இருந்து நேற்று வரை 11 ஆண்டுகளில் ரூபாய் மதிப்பு ரூ.30க்கு மேல் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
