அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகிபாபு தரிசனம் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு

திருவண்ணாமலை, டிச.17: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திரைப்பட நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர் சன்னதி, சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் நடிகர் யோகிபாபு தரிசனம் செய்தார். பின்னர், அம்மன் சன்னதி முன்பு நெய்விளக்கு ஏற்றி வழிபட்டார். அதனை தொடர்ந்து, அவருக்கு சிவாச்சாரியார்கள் பிரசாதம் வழங்கினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள், நடிகர் யோகி பாபுவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர், நடிகர் யோகிபாபு தெரிவித்ததாவது: ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவின்போது கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டு சற்று தாமதமாக வந்திருக்கிறேன். அட்லீ இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடித்து வருகிறேன். அது தவிர பல்வேறு படங்களிலும் நடித்து வருகிறேன் என்றார். அப்போது தவெக விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு அவர் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: