×

‘பிபிசி’ தொலைக்காட்சிக்கு எதிராக ரூ.84,000 கோடி நஷ்டஈடு கேட்டு டிரம்ப் வழக்கு: பேச்சை திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாக புகார்

 

 

வாஷிங்டன்: தனது பேச்சைத் திரித்து ஆவணப்படம் வெளியிட்டதாகக் கூறி, பிபிசி செய்தி நிறுவனம் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமார் 84 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு பிபிசி நிறுவனம் ‘டிரம்ப்: இரண்டாவது வாய்ப்பு?’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி டிரம்ப் ஆற்றிய உரையில், ‘அமைதியாகவும், தேசபக்தியுடனும்’ என்று கூறிய வார்த்தைகளை நீக்கிவிட்டு, வன்முறையைத் தூண்டும் வகையில் அவர் பேசியதாக சித்தரிக்கப்பட்டது. அதாவது, 54 நிமிட இடைவெளியில் அவர் பேசிய இருவேறு கருத்துகளை ஒன்றாக இணைத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டதாகப் பெரும் சர்ச்சை வெடித்தது.

இது குறித்து பிபிசித் தலைவர் சமீர் ஷா, ‘இது ஒரு தவறான கணிப்பு’ என்று கூறி மன்னிப்பு கோரியிருந்த நிலையில், இந்த விவகாரம் காரணமாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் இருவர் கடந்த மாதம் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, பிபிசி நிறுவனம் மீது டிரம்ப் தற்போது புளோரிடா மாகாண நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ‘வேண்டுமென்றே தீய நோக்கத்துடன் எனது பேச்சைத் திரித்து வெளியிட்டுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளதுடன், இதற்காக சுமார் 84 ஆயிரம் கோடி ரூபாய் (10 பில்லியன் டாலர்) நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ‘குறிப்பிட்ட அந்த காட்சி கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டது’ என்று கூறி இந்த வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக பிபிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Trump ,BBC ,WASHINGTON ,US ,PRESIDENT ,BBC NEWS ,President of the United States ,
× RELATED அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா-ஜோர்டான்...