- அரசு
- சித்த வர்மா பல்நோக்கு மருத்துவமனை
- தடிக்காரன்கோணம்
- சித்தார்த்
- நாகர்கோவில்
- தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சித்த
*சித்த மருத்துவர்கள் எதிர்பார்ப்பு
நாகர்கோவில் : தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி தடிக்காரன்கோணத்தில் அரசு சித்த வர்ம பல்நோக்கு மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.வர்மக்கலை தமிழ்நாட்டின் பழங்கால போர் கலை மட்டுமல்ல சித்த மருத்துவத்தில் இருந்து உருவான உயிர்காக்கும் சிகிச்சை முறையாகும். உடலின் சிறப்பு புள்ளிகளில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய்களை குணப்படுத்தும் முறையாகும்.
சித்தர்களில் முதன்மையானவரான அகத்திய முனிவரால் பொதிகைமலை மற்றும் குமரி கண்டத்தில் உருவாக்கபட்டதாக கூறப்படுகிறது. தமிழ் மருத்துவ முறைகளின் முன்னோடியாக இது திகழ்கிறது. ஜடாவர்மன் பாண்டியன் எனும் மன்னன் இதில் சிறந்து விளங்கியதாக வரலாறு கூறுகிறது. காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவியால் சீனாவில் இக்கலை பரவியது.
இடைக்காட்டார் எனும் சித்தரால் பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவியது. போகர் சைனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று இதனை தற்காப்பு கலையாகவும், உயிர்காக்கும் மருத்துவமாகவும் பரப்பினார்.
இதில் இருந்தே அக்குபஞ்சர் (வர்ம புள்ளி) அக்குபிரசர் (தொக்கணம்) தற்காப்பு கலைகள் (கராத்தே, குங்பூ, ஜீடோ) பிறந்தன. இக்கலை கேரளாவிற்கு சென்று அங்கு வேகமாக பரவி இன்றளவில் பரவலாக பயன்படுத்தபட்டு வருகிறது.
இத்தகைய சிகிச்சை மூலம் மனிதனுக்கு படுவர்மம் 12, தொடுவர்மம் 96, உள் வர்மம் 6, தட்டுவர்மம் 8 என பகுத்தாய்ந்து மனிதர்களுக்கு ஏற்படும் 4000 நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கிறது.
மேலும் உடலில் தலை பகுதியில் 37 புள்ளிகள், நெஞ்சு பகுதியில் 13, உடலின் முன்பகுதியில் 15, முதுகு பகுதியில் 10, கைகளின் முன்பகுதி 9, கைகளின் பின்பகுதி 8, கால்களின் முன்பகுதி 19, கால்களின் பின்பகுதி 13, கீழ்முதுகு பகுதி 8 என 108 புள்ளிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கிறது.
இத்தகைய வர்ம கலை குமரி மாவட்டத்தில் இப்போதும் பரவலாக சித்த மருத்துவத்திலும், சிகிச்சை முறையிலும் கடை பிடிக்கப்பட்டு இதனால் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு குமரி மாவட்டத்தில் இதற்கான சிகிச்சை மையம் அரசால் தொடங்கப்பட வேண்டும் என்ற மாவட்ட மக்களின் கோரிக்கையின் படி தமிழக அரசு இத்திட்டத்தினை செயல்படுத்திட முன்வந்தது.
இதற்காக தடிக்காரன்கோணம் பகுதியில் சுமார் 81 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டது. 6.12.2024 அன்று இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு சித்த வர்ம பல்நோக்கு உறைவிட மருத்துவமனை எனப்படும் இத்திட்டத்தின் படி மாவட்டத்தின் பாரம்பரிய சித்த மற்றும் வர்ம சிகிச்சையின் கீழ் அடிப்படை நோய்களை குணப்படுத்திட முடியும்.
இதன்மூலம் அழிவின் விளிம்பில் உள்ள பாரம்பரிய மருத்துவம் பாதுகாக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் திட்டம் இதுவரை செயல்படாமல் உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி உயிர்காக்கும் மகத்தான இத்திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும்
இது தொடர்பாக சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் சங்கரபாண்டியன் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :குமரி மாவட்டத்தில் பாரம்பரிய மருத்துவமான சித்த மற்றும் வர்ம பல் நோக்கு மருத்துவமனை அமைக்க அரசு முடிவு செய்தது வரவேற்க கூடியது. இதற்கான முயற்சிகள் மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவர்.
முதலமைச்சரின் உத்தரவின்படி இடம் தேர்வு, அரசு ஆணை உள்ளிட்டவை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக இந்த பணிகளை தொடங்க வேண்டும். பல்வேறு சிறப்பு பெற்ற சித்த மற்றும் வர்ம கலை சிகிச்சை முறை ஆங்கில மருத்துவத்தின் வீரிய வளர்ச்சியால் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை காப்பாற்ற, மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.
