×

சாலையை சீரமைக்க கோரி கிராம பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை : சாலையை சீரமைக்க கோரி அரும்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாடானை அருகே உள்ளது கீழ அரும்பூர் கிராமம். இங்கு 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு திருவாடானையில் இருந்து குளத்தூர் வழியாக சாலை அமைக்கப்பட்டு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.

இந்நிலையில்கீழ அரும்பூருக்கு செல்லும் பிரிவு சாலை குளத்தூர் முதல் கீழரும்பூர் காலனி குடியிருப்பு வரை மிகவும் மோசமாக பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டு குழியுமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் பேருந்து அடிக்கடி நிறுத்தி விடுகின்றனர்.

சாலையை சீரமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் பலமுறை மனு கொடுத்தும் சாலை சரி செய்யப்பட வில்லை. இதனால் நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து அரும்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதுகுறித்து கீழ அரும்பூரை சேர்ந்த மகளிர் மன்ற தலைவி நாச்சியார் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்திற்கு கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் சாலை அமைக்கப்பட்டது.

அதன் பிறகு பல வருடங்கள் ஆகி விட்டதால் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் சிறிய மழை பெய்தால் கூட பேருந்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும், முதியவர்களும் பெரிதும் சிரமப்படுகின்றனர். அவசரத்திற்கு ஆட்டோவை கூப்பிட்டால் ரூ.200 வாடகைக்கு வரும் ஆட்டோக்கள், 500 ரூபாய் வரை கேட்கின்றனர்.

ஏன் இவ்வளவு தொகை கேட்கிறீர்கள் என்று கேட்டால், உங்கள் ஊர் சாலை சரியில்லை என்கின்றனர். எனவே அரசு உடனடியாக எங்கள் கிராமத்திற்கு செல்லும் குளத்தூர் பிரிவு சாலையில் இருந்து கீழ எழும்பூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு வரை சென்று திருவெற்றியூர் தொண்டி சாலை இணையும் வரை சாலையை சீரமைத்து தர வேண்டும். இந்த நிலை தொடருமானால் அடுத்த கட்டம் பஸ் மறியல் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றனர்.

Tags : Thiruvadanai ,Arumpur Panchayat ,Keezh Arumpur ,Kulathur ,
× RELATED தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – 2025ஐ...