ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்கள் இடைநிற்றல் மிகவும் குறைவு

*குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் பாராட்டு

வாலாஜா : ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் சந்திரகலா தலைமை தாங்கினார்.

இதில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா கலந்து கொண்டு, பள்ளிக் கல்வித் துறையின் கட்டாய கல்வி சட்டம் மூலம் இட ஒதுக்கீட்டில் கல்வி பயிலும் குழந்தைகள் எண்ணிக்கை, பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், சமூக நலத்துறையின் மூலம் குழந்தை திருமணம் தொடர்பாக வரப்பட்ட புகார்கள் மற்றும் தடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குழந்தை திருமணம் தவிர்க்கப்பட்ட குழந்தைகள் தற்போது பள்ளியில் பயின்று வருபவர்கள் குறித்தும், அரசு பள்ளி விடுதிகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் தங்குவதற்கான பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத விடுதிகள் குறித்தும், விடுதிகளில் மாணவ மாணவிகளை கண்காணிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்தும், குழந்தைகள் தங்களுக்குள்ள பிரச்னைகளை தெரிவித்த விவரங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், குழந்தைகள் பராமரிப்பு இல்லம் பதிவு செய்யப்பட்டு மற்றும் நடவடிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா பேசியதாவது: குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமை, கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார். குழந்தைகளின் கல்வி எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், கல்லூரிக் கனவு மற்றும் அன்புக் கரங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் சரியாக தண்ணீர் அருந்துகின்றார்களா?, கழிவறை முறையாக செல்கின்றார்களா? போன்றவற்றை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகள் இடைநிற்றல் மிகவும் குறைவாக உள்ளது. அதற்கான குழந்தைகள் ஆணையத்தின் சார்பாக பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அதேசமயம் அரசாங்கம் கொடுக்கின்ற கட்டாய கல்வி இட ஒதுக்கீட்டில் 14 இலவச கல்வி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து அரக்கோணம், நெமிலி, திமிரி, சோளிங்கர், வாலாஜா போன்ற வட்டாரங்களில் வருகின்ற காலங்களில் அதிகளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி குழந்தைகளின் உரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சமூக நலத்துறை மற்றும் குழந்தை தொழிலாளர் நல துறை சார்பில் ஆய்வு செய்ததில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது என்பதை பார்க்கும் பொழுது குழந்தைகள் ஆணையம் மகிழ்ச்சியடைகிறது.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருந்து குழந்தைகள் ஆணையம் செயல்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த குறுகிய காலத்திலேயே 33 மாவட்டங்களுக்கு சென்று குழந்தைகள் தொடர்பான அனைத்து துறைகளிடம் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடி உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் டிஆர்ஓ தனலிங்கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித பிரியா, டிஎஸ்பி வெங்கட கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: