*தேர்தல் ஆணைய பார்வையாளர் தலைமையில் நடந்தது
விருதுநகர் : வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணைய பார்வையாளர் விஜய் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக அரசு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் விஜய் நெஹ்ரா தலைமை தாங்கினார். கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த ஒரு தகுதியான வாக்காளரும் விடுபடக்கூடாது என்பது உறுதியாக எடுத்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அதில், எதிர்வரும் நாட்களில் நடைபெற உள்ள சிறப்பு தீவிர திருத்தம் தொடாபான கோரிக்கை மற்றும் ஆட்சேபனை பெறும் காலங்களிலும் ஒத்துழைப்பு வழங்கி, எந்த ஒரு தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்தார். நிகழ்வில் டிஆர்ஓ ஆனந்தி, சார் ஆட்சியர் முகமது இர்பான், அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 41 பயனாளிகளுக்கு இலவச பட்டா
*கலெக்டர் வழங்கினார்
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 41 பயனாளிகளுக்கு இலவச இணைய வழிப் பட்டாக்களை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல், வேலைவாய்ப்பு, ரேசன் கார்டு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து பால் உற்பத்தியாளர் மேம்பாட்டுத்துறை சார்பில் அண்ணா நூற்றாண்டு நலநிதி திட்டத்தில் பெருமாள் தேவன்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் நமச்சிவாயம் விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து வாரிசுதாரரிடம் ரூ.4.25 லட்சம் உதவித்தொகை காசோலையை வழங்கினார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த 41 பயனாளிகளுக்கு இலவச இணைய வழிப் பட்டாக்களை வழங்கினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ. ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் காளிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
