சென்னை: பாமகவில்ராமதாஸ் – அன்புமணி கருத்து வேறுபாடு 2026 தேர்தல் வரை தொடரும் என கூறப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக கடும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்த பிளவு காரணமாக கட்சியின் சமூக வாக்குகள் பிரியும் சூழல் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பாமக 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 4.35 வாக்குகளையே பெற்றது. இந்த வாக்கு வங்கியை அடிப்படையாகக் கொண்டு பிளவைப் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. கட்சியில் ராமதாஸும் அன்புமணியும் கூட்டணி விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். ராமதாஸ் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். பாஜகவை பலவீனப்படுத்தும் வகையில் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். அமித் ஷா தமிழ்நாட்டில் கலந்து கொள்ள உள்ள கூட்டத்தில் அன்புமணி பங்கேற்க இருந்த சூழலிலேயே ராமதாஸ் உள்கட்சி பிரச்சனையை வெளிப்படையாக எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில், அன்புமணி திமுக எதிர்ப்பு அரசியலை முன்னிலைப்படுத்தி, பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிறார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, அப்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக பிம்பம் உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் அன்புமணி தற்போது திமுக எதிர்ப்பை மையப்படுத்தி அரசியல் செய்கிறார். ஆனால் ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு திமுகவுக்கு தேவை என்ற காரணத்தால் அவர்கள் இந்த நிலைப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது .இந்த கருத்து வேறுபாடு அன்புமணி மற்றும் ராமதாஸுக்கு இடையே கூட்டணி தொடர்பான பிரச்சனையாக உள்ளது.
இது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே தீர்வு காணும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதுவரை சமரசத்துக்கு இடமில்லை என்றே கூறப்படுகிறது. கட்சியில் இரு அணிகள் நிலையே தொடரும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், அன்புமணி 10.5% இட ஒதுக்கீட்டை மையப்படுத்தி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எடப்பாடி தொகுதியில் போட்டியிடவோ அல்லது நடிகர் விஜய் யின் கட்சியுடன் இணையவோ வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இது தந்தை – மகன் இடையிலான ஈகோ பிரச்சனை என்றும், 2026 தேர்தலுக்குப் பிறகே எந்த அணி வலுவானது என்பது தெரியவரும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.இதனிடையே, அன்புமணி விருப்ப மனு என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக ராமதாஸ் அணியினர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாமகவின் உள்கட்சி பிரச்சனை தமிழக அரசியலில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
