வல்லம்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கடுவெளி பனையடியான் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் கிரிநாத் (14), விக்னேஷ் (10). சிறுவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை தாத்தா பாலகிருஷ்ணனுடன் (70) கடுவெளி காவிரியாறு தடுப்பணையில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது தடுமாறி மூவரும் ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதில் விக்னேஷ் மீட்கப்பட்டான். தாத்தா பாலகிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார். கிரிநாத்தை தேடும் பணியில் நேற்று காலை தஞ்சாவூரை சேர்ந்த 20 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் காவிரியாற்றில் அதிகளவு தண்ணீர் வரத்து உள்ளது. அதை நிறுத்தி தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடுவெளி மெயின் ரோட்டில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் வந்து அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பின் மக்கள் மறியலை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் சிறுவன் கிரிநாத் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
ராமநாதபுரம்: ஆந்திராவை சேர்ந்த சிலர் ஆட்டோ ரிக்ஷாக்களில் சாய்பாபா படம், சிலை வைத்து ராமநாதபுரம் நகரின் வீதிகளில் கடந்த சில நாட்களாக வலம் வருகின்றனர். இந்த குழுவில் உள்ள ஆந்திர மாநிலம், கொழமுடை பகுதியை சேர்ந்த ஏழுகொண்டால் மனைவி பென்சலம்மாள் (33) நேற்று ராமநாதபுரம் அருகே குயவன்குடி சாய்பாபா கோயில் பகுதியிலுள்ள ஒரு குளத்தில் இரு மகன்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு மகன் மூழ்கியுள்ளான். உடனே பென்சலம்மாள், மற்றொரு மகன் நவீன் (12) ஆகியோர் அவனை காப்பாற்றச் சென்றனர். அப்போது இருவரும் மூழ்கி இறந்தனர். மற்றொரு மகன் மீட்கப்பட்டான்.
