×

முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளை?: விஸ்வரூபம் எடுக்கும் குமரி ரிசார்ட் விவகாரம்

அஞ்சுகிராமம்: குமரி மாவட்டத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளை நடந்ததாக ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளதால், இது தொடர்பாக உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மருங்கூரை அடுத்த ராமனாதிச்சன்புதூரில் அமைந்துள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்த பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு வகை போதை பொருட்கள் சப்ளையான விவகாரத்தில் குலசேகரத்தைச் சேர்ந்த கோகுல் கிருஷ்ணன் (34), அவரது மனைவி சவுமி (33), சகோதரர் கோவிந்த் கிருஷ்ணா (27), ரிசார்ட் உரிமையாளர் ராஜூ (64) உள்பட 8 பேர் அஞ்சுகிராமம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களை சேர்ந்த 70க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு இருக்கிறது. கைதாகி உள்ள கோகுல் கிருஷ்ணன் உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் நாள் தோறும் பல்ேவறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த வழக்கில் கைதாகி உள்ள கோகுல் கிருஷ்ணனுக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்களுடன் நேரடி தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் பல்வேறு ரிசார்ட்டுகளில் இது போன்று கலைவிழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்வுகளின் மூலம் பலரையும் ஒருங்கிணைத்து, போதை பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாக ரகசிய தகவல், காவல்துறைக்கு கிடைத்துள்ளது.

கொண்டாட்டம் நடந்த ரிசார்ட்டுக்கு, தற்போது வரை வெளிநாட்டினர் பலர் வந்த வண்ணம் உள்ளனர். எனவே தொடர்ந்து அந்த ரிசார்ட்டை போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து உயர் ரக போதைப் பொருள்கள் எப்படி இங்கு வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? இதில் புரோக்கராக செயல்பட்டது முக்கிய புள்ளிகள் யார்? என்பது குறித்த பல்வேறு தகவல்களை உளவு பிரிவு போலீசாரும் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு போதை பொருட்களை விமானத்தில் கொண்டு வந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படியே ெகாண்டு வந்தாலும் விமான நிலைய சோதனைகளில் இவர்கள் சிக்காமல் இருந்தது எப்படி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிகாரிகள் உடந்தையுடன், போதை பொருட்கள் சப்ளை நடந்து இருக்குமா? என்று விசாரிக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், கோகுல் கிருஷ்ணனுடன் நெருக்கமாக இருப்பவர்கள் யார்? என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்களுக்கு போதை பொருட்கள் சப்ளை நடந்ததா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடக்கிறது.

மேலும் குமரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் உள்ள தொழிலதிபர்கள், முக்கிய புள்ளிகளுடன் கோகுல் கிருஷ்ணன் தொடர்பில் இருந்துள்ள தகவலும் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவர்களின் பங்கு என்ன? என்ற விசாரணையும் நீளும் என தெரிகிறது. மேலும் சம்பவம் நடந்த அன்று, ரிசார்ட்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். ஆனால் போலீசார் முதலில் குறைவான எண்ணிக்கையில் சென்றதால், பலர் தப்பி உள்ளனர். அவர்களை பற்றிய விபரங்களையும் சேகரிக்க எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Kumari Resort ,Anjugramam ,Intelligence Division ,Kumari district ,Ramanathichanputhur ,Marungurai ,Kanyakumari district ,
× RELATED எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதியில்...