×

சிவகங்கை பைபாஸில் ரயில்வே கிராசிங் பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

சிவகங்கை : சிவகங்கை புறவழிச்சாலையில் ரயில்வே கிராசிங்கில் தண்டவாளங்களுக்கு மேல் செல்லும் பகுதியில் பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட தலைநகரான சிவகங்கை வழியே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறவழிச்சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் திருப்புத்தூர் சாலை மற்றும் மானாமதுரை சாலையை இணைக்கும் வகையில் பெருமாள்பட்டியில் இருந்து சாமியார்பட்டி வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது.

மற்றொரு புறவழிச்சாலையான திருப்புத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானாமதுரை சாலையில் உள்ள வாணியங்குடி வரை சாலை அமைக்கும் பணி மட்டும் துவங்கப்படவில்லை. இச்சாலை மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் வருவதாகும்.

இந்த சாலை காஞ்சிரங்காலில் இருந்து சூரக்குளம், பையூர், ஆயுதப்படை குடியிருப்பு வழியாக வாணியங்குடி வந்தடையும். சுமார் 10.6 கி.மீ நீளமுள்ள இச்சாலை சூரக்குளம், கீழக்கண்டனி ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்கிறது. இச்சாலை பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துவங்கப்படாமல் கிடப்பில் அமைக்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் காஞ்சிரங்கல் ஊராட்சி பகுதியில் இருந்து மொத்தம் 10.6 கி.மீ தூரத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.109.51 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் பெறப்பட்டு முதற்கட்டமாக, மொத்தம் 7 கி.மீ தொலைவிற்கு ரூ.77.16 கோடியில் சாலை அமைக்கும் பணி கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில் துவங்கப்பட்டது. காஞ்சிரங்காலில் இருந்து தொண்டி சாலை இணைப்பு, பழமலை நகர், ஆயுதப்படை குடியிருப்பு வழி இளையான்குடி சாலை இணைப்பு வரை சாலை பணிகள் முடிவடைந்து விட்டன.

ஆனால் இச்சாலையில் காஞ்சிரங்கால் பகுதியில் ரயில்வே கிராசிங்கில் பால பணிகள் தண்டவாளங்களுக்கு மேல் புறம் செல்லும் பகுதியில் மட்டும் நடைபெறவில்லை. அப்பகுதி தவிர மற்ற பகுதிகளில் பால பணிகளும் பல மாதங்களுக்கு முன்னரே முடிவடைந்து விட்டது.

ரயில்வே கிராசிங்கில் மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள தூரத்திற்கு மட்டும் பால பணிகள் முடிவடைந்த நிலையில் தண்டவாளங்களுக்கு மேல் புறம் பால பணிகள் செய்ய ரயில்வே துறை ஒப்புதல் வழங்காமல் இழுத்தடித்ததால் பணிகள் துவக தாமதம் ஏற்பட்டது.

தற்போது தான் பில்லர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பாலம் துவங்கும் இடம் வரை போக்குவரத்து நடைபெற்று வருகிறது. எனவே விரைந்து இப்பணிகளை முடித்து பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள், வர்த்தகர்கள் கூறியதாவது: ரயில்வே துறை சார்பில் ஒப்புதல் வழங்க தாமதம் செய்ததால் தான் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.109.51 கோடி செலவில் தற்போது பாலம் மற்றும் சாலை அமைத்தும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னையால் தொடர்ந்து விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே தண்டவாளத்திற்கு மேல் செல்லும் பகுதியில் பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.

Tags : Sivaganga Bypass ,Sivaganga ,Sivaganga Expressway ,National Highway Department ,
× RELATED சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள்...