×

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ளது தீபத் தூண் அல்ல: ஐகோர்ட் கிளையில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்றும் அங்கு இருப்பது தீபத் தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் தெரிவித்தள்ளது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சொத்து உரிமை சார்ந்தது என்பதால் உரிமையியல் வழக்கு மூலமே தீர்வு காண முடியும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.

இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை, தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் தான் அனுமதி வழங்க வேண்டும்.

ஒரு இடத்தில் தீபம் ஏற்றிக் கொண்டிருக்கும் மற்றொரு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டுமென்றால் அதனை கோவில் நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். தீபம் ஏற்ற சொல்லும் இடத்திற்கு அருகில் தர்கா உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ளது தீபத் தூண் உள்ளதா என்பதே அடிப்படை கேள்வியாக உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்றும் அங்கு இருப்பது தீபத் தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரிய வழக்கம் என்றால் எதாவது ஒரு இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும். உரிமையியல் நீதிமன்றத்தில் 1923ல் வழக்கு விசாரணையின்போது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏதும் கோரப்படவில்லை. மேலும் கடந்த 75 ஆண்டுகளாக மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது .

எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு இரண்டு முறை இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அது தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. தீபம் குறித்த பொதுநல மனு வழக்கால் 1994 ஆம் ஆண்டிலிருந்து தான் பிரச்சனை கிளம்பியது. மத நல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Thirupparangunram ,Deepat ,Tamil Nadu government ,Aycourt ,Madurai ,Tamil Nadu High Court ,Tiruparangundaram ,Karthigai Deepa Day ,Thirupparangunandam ,
× RELATED மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம்...