×

நச்சுக் காற்றைச் சுவாசிக்கிறோம்; குழந்தைகள், வயதானவர்களுக்கு கடும் பாதிப்பு! – மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு

டெல்லி : ஒவ்வொரு நகரத்திலும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும் என மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் காற்று மாசு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பெரும்பாலான நகரங்களில் நச்சு காற்றை சுவாசித்துதான் மக்கள் வாழ்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நுரையீரல் நோய்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டு வருகிறது. புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூத்த குடிமக்கள் சிரமப்படுகின்றனர். இந்த விஷயத்தை அரசும், எதிர்க்கட்சிகளும் ஒப்பு கொள்ள வேண்டும். இது கொள்கைரீதியான பிரச்னை அல்ல. காற்று மாசால் மக்கள் பாதிக்கப்படுவதை இந்த அவையில் உள்ள அனைவரும் ஒப்பு கொள்வார்கள்.

ஒவ்வொரு நகரங்களிலும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான திட்டத்தை வகுத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப விரிவான திட்டத்தை செயல்படுத்தி காற்று மாசை கட்டுப்படுத்தலாம். அந்த திட்டங்களை அரசு உருவாக்குவது அவசியம். அதற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறோம். இப்போதெல்லாம் இந்த அரசும் எதிர்க்கட்சியும் ஒப்பு கொள்ளக்கூடிய பிரச்னைகள் அதிகம் இல்லை. காற்று மாசு விவகாரத்தில் ஒருவரையொருவர் விமர்சிக்காமல் ஆக்கபூர்வமான விவாதம் நடத்தலாம். இந்த பிரச்னையை தீர்க்க அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும். அது, அனைவரும் பங்கேற்கும் விவாதமாக இருக்க வேண்டும். மக்களுக்கு வாழ தகுதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும். முறையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதன் மூலமாக அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள் நாம் இந்த பிரச்னையை தீர்க்க முடியாது என்றாலும் பிரச்னையின் பாதிப்புகளை குறைத்து மக்கள் வாழும் சுற்றுச்சூழலை மேம்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Rahul Gandhi ,Lok Sabha ,Delhi ,
× RELATED கொளத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்...