சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகவும், சுடர்விடும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறது! மகளிர்க்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை/விரிவாக்கம்! மகளிர் சுய உதவிக் குழுக்கள்! வாழ்வில் பொருளாதார ஏற்றம் காண விடியல் பயணத்திட்டம்! பணிபுரியும் பெண்களுக்குத் தோழி விடுதிகள்! அறநிலையத்துறையில் பெண் ஓதுவார்கள்! பெண் பத்திரிகையாளர்களுக்கு கலை வித்தகர் விருது! தொழில் முனைவோராக பெண்கள்! காவல்துறை மகளிர்க்கு சலுகைகள்! உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு! பெண்கல்வியை உயர்த்திடும் புதுமைப் பெண் திட்டம்! அரசு ஊழியர்கள்/ ஆசிரியர்களுக்கு மகப்பேறு விடுப்பு! 12 மாதங்களாக உயர்வு! சிப்காட் தொழில் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள்! போன்ற எண்ணற்ற மகளிர் திட்டங்களால் ஒளிரும் தமிழ்நாடு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் மகளிர் சமுதாய மேம்பாட்டிற்குப் புரட்சிகரமான புதிய LIGU திட்டங்களை அறிமுகப்படுத்தி மகளிர் சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024; சமூகத்தில் பெண்களுக்கான சமூகநீதி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை” 2024-ஐ முதலமைச்சர் அவர்கள் 21.2.2024 அன்று வெளியிட்டு மகளிர் உரிமைக்கு வழிவகுத்துள்ளார்கள். முதலமைச்சர் விடியல் பேருந்து திட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மட்டுமல்ல. தமிழ்நாடு முழுவதிலும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லா பயண வசதி வழங்கும் விடியல் பயணத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி ஒரு நாளைக்கு ஏறத்தாழ 60 இலட்சம் மகளிர் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் மகளிர் மாதம் ஒன்றுக்கு ஏறத்தாழ 1000 ரூபாய் வரை வாய்ப்பைப் பெற்று மகிழ்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை; ஏழை மக்களின் குடும்பங்களிலும், கிராமப் பொருளாதாரத்தைச் சுமக்கும் முதுகெலும்பாகப் திகழும் மகளிர்க்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இதுவரை 1 கோடியே 14 இலட்சம் மகளிர் மாதம் தோறும் 1000 ரூபாயை வங்கி கணக்குகளில் நேரடியாகப் பெற்று தன்னம்பிக்கை உணர்வில் திளைக்கிறார்கள்.
புதுமைப் பெண் திட்டம்; முதலமைச்சர் ஒரு புரட்சிகரமான திட்டம் இது. 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் தமிழ்வழியிலும் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவியர்க்கு படிப்பு முடியும் வரை மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கல்லூரி வாசலையே தொட்டுப் பார்க்காத குடும்பங்களில் இருந்து பெண்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் அருமையான வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்கள். பணிபுரியும் மகளிருக்கு “தோழி விடுதிகள்”; மகளிர் படித்து முடித்துச் சொந்த ஊரை விட்டுவந்து வெளியூரில் தங்கிப் பணிபுரிவதில் பல இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. இதைக் களையும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பணிபுரியும் மகளிர்க்காக, சேலம், தஞ்சாவூர் உட்பட முக்கிய நகரங்களில் எல்லாம் உருவாக்கியுள்ள அருமையான திட்டம் தோழி விடுதிகள் திட்டம். இதன் மூலம் பணிபுரியும் மகளிர் பாதுகாப்புடன் பணிபுரிகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் ரத்து; கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் 31.3.2021 அன்றைய தேதியில் நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,755.99 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. 1,17,617 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 15,88,309 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகப்பேறு விடுப்பு உயர்வு; அரசுப் அலுவகங்களில் பணி புரியும் மகளிர் ஆசிரியைகளின் மகப்பேறு விடுப்பு 9 மாதம் என்பது 12 மாதங்களாக 2021ஆம் ஆண்டு முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு அதிகரிப்பு; திராவிட நாயகர் அவர்கள் ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கிடும் கடன் உச்ச வரம்பை ரூ.12 இலட்சம் என்பதில் இருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தி உத்தரவிட்டார்கள். 2016 முதல் 2020 வரை நான்கு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ரூ.39,468.88 கோடி. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 2021 -முதல் 2025 வரை வழங்கப்பட்டுள்ள கடன் ரூ. 1,12,299 கோடி சத்துணவுத் திட்ட மகளிர் மேம்பாட்டில் திராவிட நாயகர்; சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்க்கான ஓய்வு வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளார். தொழில் முனைவோராக மகளிர்; பெண்கள் கல்வியோடு நின்றிடாமல் அவர்களுக்குத் தாமே சுயமாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். Start Up எனப்படும் புத்தொழிலை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசாங்கம் மானிய நிதி அளிக்கும் TANSEED (Tamil Nadu Startup Seed Grand Fund) என்கிற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, பெண் தொழில் முனைவோர் தொடங்கும் புத்தொழில்களுக்கு 15 இலட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்திய அளவில் தொழிற்சாலையில் பணிபுரியும் மகளிரில் 41 சதவீதம் மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஒன்றிய அரசு அறிவித்துப் பாராட்டியுள்ளது.
காவல்துறை மகளிர்க்கு சலுகைகள்; பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண் காவலர்கள். முக்கியப் பிரமுகர்களின் வருகையின்போது வீதிகளில் நீண்ட நேரம் நிற்கவைப்பதைத் தடுத்து, அவர்களுக்கு இலகுவான பணிகள் வழங்க ஆணையிட்டு, அவ்வாறே வழங்கப்படுகிறது. கலைத்துறை, பத்திரிகை துறைகளில் சிறந்த மகளிர்க்கு கலைத்துறை வித்தகர்விருதுகள்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டில் மட்டும் மகளிர்க்கான கலைத்துறை வித்தகர் சிறப்பு விருது பழம்பெரும் திரையுலகப் பின்னணிப் பாடகி திருமதி பி.சுசீலா அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல சிறந்த மகளிர் பத்திரிகையாளர்க்கும் சிறப்பு விருதாக கலைஞர் எழுதுகோல் விருது அறிவிக்கப்பட்டு திருமதி சுகிர்தா சாரங்கராஜ் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையில் பெண் ஓதுவார்கள்; திருக்கோவில்களில் அனைத்துச் சாதியாரும் அர்ச்சகர் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 11 பெண்கள் திருக்கோவில்களில் பெண் ஓதுவார்களாகப் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு இடஒதுக்கீடு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு 1996 வழங்கப்பட்டது. பின்னர் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு, இலட்சக்கணக்கான மகளிர் உள்ளாட்சி நிறுவனங்களில் பதவிப் பொறுப்புகள் பெற்றுத் தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றனர். இன்று 21 மாநகராட்சிகளின் மேயர்களில் 11 மகளிர் பெண் மேயர்களாக விளங்குவது தமிழ்நாட்டிற்குரிய தனிச் சிறப்பாகும்.
சிப்காட் தொழில் வளாகங்களில் குழந்தைகள் காப்பகங்கள்; தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் குழந்தைகளை குழந்தைகள் பாதுகாப்பகங்களில் விட்டுவிட்டு கவலையின்றி தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக 17 சிப்காட் நிறுவனங்களில் குழந்தைகள் காப்பகங்களை ஏற்படுத்தினார்கள். இக்காப்பகங்களில் ஏறத்தாழ 3 இலட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றார்கள். இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திராவிட மாடல் அரசில் புதியபுதிய திட்டங்கள் நிறைவேற்றி மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி வருகிறது என்பதை வரலாறு போற்றுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விரிவாக்கம்; இப்படி பெண்கள் முன்னேற்த்திற்காக தொடர்ந்து பல திட்டங்களை நிறைவேற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.12.2025) மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் துறைகள் தோறும் சாதனைகள் படைத்து வெல்லும் தமிழ்ப் பெண்களைச் சிறப்பிக்கும் மாபெரும் விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை பயன்பெறாதவர்களும் பயன்பெற்று மாதம் 1000 ரூபாய் பெற கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை விரிவுபடுத்தி வழங்குகிறார்கள். இதே நேரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் பெருமக்கள் பங்குகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் இலட்சக்கணக்கான மகளிர்க்கு நேரடியாக வங்கி கணக்குகளில் 1000 ரூபாயைச் செலுத்தும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்குகிறார்கள்.
