திருப்பூர்: அமெரிக்க வரி விதிப்பால் பின்னலாடை தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதி மதிப்பில் 20 சதவீதம் சலுகை கிடைக்குமா? என்று திருப்பூர் ஆடை தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவுடன் வர்த்தக தொடர்புள்ள அனைத்து நாடுகளுக்கும் வரி சமத்துவம் என்ற அடிப்படையில் ஏற்கனவே அமலில் உள்ள இறக்குமதி வரியை காட்டிலும் பல மடங்கு வரி விதிப்பை அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கான வரியை மேலும் 50 சதவீதம் திடீரென உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்தியாவின் போட்டி நாடுகளுக்கான வரியை அமெரிக்கா குறைத்தது. அதிகப்படியான வரி விதிப்பு காரணமாக இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள், அமெரிக்க வர்த்தகத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
திருப்பூரில் இருந்து மாதத்திற்கு ரூ.1,750 முதல் ரூ.2 ஆயிரம் கோடி வரை அமெரிக்காவுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கா 50 சதவீத வரி விதிக்கப்பட்டதால் ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களும் 20 முதல் 25 சதவீதம் வரை நஷ்டத்தை சந்தித்தனர். இந்தியாவுடன் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் நாட்கள் கடந்து வருவதால் அமெரிக்க இறக்குமதியாளர்கள் வேறு நாடுகளை நோக்கி தங்களின் ஆர்டர்களை மாற்றி வருகிறார்கள். இதே நிலை நீடித்தால் திருப்பூரிலிருந்து 40 சதவீத ஆடை ஏற்றுமதி பாதிக்கப்படும். மேலும், பொருளாதார திறன் உள்ள நிறுவனங்கள், வேறு சந்தையை நோக்கி சென்று அமெரிக்க வர்த்தகத்துக்கு இணையான வர்த்தகத்தை மேற்கொள்ள குறைந்தது 1 வருடத்துக்கு மேல் ஆகும் என தெரிவித்துள்ளனர்.
தாக்குப்பிடிக்க முடியாத நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தை மூட வேண்டிய சூழலை நோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பாதிப்புகளை கேட்டு உதவிகளை அறிவித்துள்ளது. அதன்படி அமெரிக்காவுடன் வர்த்தகத்தை மேற்கொண்டு வரும் நிறுவனங்களுக்கு தற்போது உள்ள கடன் தொகையை காட்டிலும் கூடுதலாக 20 சதவீதம் வழங்க உத்தரவிட்டுள்ளது. இது மேலும் கடன் சுமையைத்தான் அதிகரிக்குமே தவிர வேறு எந்த வகையிலும் உதவாது. அமெரிக்க ஏற்றுமதியை தக்கவைத்து கொண்டு நிறுவனங்களையும் காப்பாற்றி வேலை வாய்ப்புகளை தக்கவைக்க வேண்டும் என்றால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி மதிப்பில் 20 சதவீத சலுகை வழங்க வேண்டும்.
அது மட்டுமே அனைத்து நிலை நிறுவனங்களையும் காப்பாற்றும். பாதிப்பு என்பது ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல அது சார்ந்து இயங்கும் பல தரப்பட்ட ஜாப் ஒர்க் நிறுவனங்கள், உணவகங்கள், மளிகை, காய்கறி கடைகள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டவை அடங்கும். இதுவரை அமெரிக்கா ஆர்டர்களை நம்பி ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் அடுத்து செய்வதறியாது உள்ளன. பொங்கல் விடுமுறைக்கு பின் அதிக பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
