- வாலிகண்டபுரம் அரசு
- பள்ளி
- பெரம்பலூர்
- வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி
- வேப்பந்தட்டை தாலுகா
- பெரம்பலூர் மாவட்டம்
- மாவட்ட கல்வி அலுவலர்
- செல்வகுமார்
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்
- சுரேஷ் குமார்
பெரம்பலூர், டிச. 11: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) செல்வகுமார் தலைமை வகித்தார். மாவட்ட பிற்பட்டோர் நலத்துறை அலுவலர் சுரேஷ்குமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராசு வரவேற்று பேசும்போது, பள்ளியில் நடைபெற்று வருகின்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு, மிதிவண்டி நிறுத்தும் இடம், மாணவிகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்கப் பட்டிருப்பது குறித்தும் தெரிவித்தார். மேலும் வலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பசுமை பள்ளி விருது, காமராஜர் விருது, புதிதாக கட்டப்பட்ட வரும் கலையரங்கம், புதுப்பிக்கப்பட்ட வேதியியல் ஆய்வகம் போன்ற பல்வேறு பணிகளை எடுத்துக் கூறினார்.
வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக உள்ள அரசு நிதி மற்றும் முன்னாள் மாணவர்கள் அமைப்பு மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன் கலையரங்கத்திற்கான பார்வையாளர்கள் அரங்கம் அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து, வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 40 மாணவர்கள், 48 மாணவிகள் என மொத்தம் 88 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றிய பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக வழங்கி வருகிற பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பாக புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் ஆகிய திட்டங்களின் மூலம் உயர் கல்வியில் தன்னிறைவு பெறுவதற்கு அரசின் ஆக்கப் பூர்வமான முயற்சிகளை விளக்கிப் பேசினார் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வின் மூலமாக மாணவர்கள் பயனடைந்த சிறப்புகளை எடுத்துக் கூறினார்.
இதில், மாநில அளவில் நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற யுவன் என்ற மாணவனுக்கு எம்எல்ஏ பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இதில் சென்டினியல் அரிமா சங்க சாசன தலைவர் ரவிச்சந்திரன், கிழக்குஒன்றிய பொறுப்பாளர் ஜெகதீஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினர் சாவித்திரி மகாராஜன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அமராவதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு, பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவர் பிச்சைப்பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை பேசினர். வேதியியல் ஆசிரியர் வரதராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்துக் கூறினார். ஏற்பாடுகளை ஜீவா, சுரேஷ், அருள்மணி, சத்தியசீலன் உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
