- திருத்துறைப்பூண்டி
- பல்லன்கோவில் இணைப்புப் பாலம்
- முள்ளியார் ஆறு
- வரம்பியம்-விட்டகட்டி சாலை
- திருவாரூர் மாவட்டம்
திருத்துறைப்பூண்டி, டிச. 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வரம்பியம் -விட்டுக்கட்டி சாலையில் முள்ளியாற்றின் குறுக்கே பள்ளங்கோவில் இணைப்பு பாலம் பாரத பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்றது. கட்டுமான பணி முடிவடைந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சாலையை சீரமைக்காமல், மண்ணைக் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக மண் சரிந்து ஆற்றில் செல்வதோடு, சாலையில் போடப்பட்ட மண் முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விட்டது.
இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினம்தோறும் அவதி அடைந்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள், வழுக்கி கீழே விழுந்து விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.பாலம் கட்டப்பட்டும் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சாலையை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
