கோத்தகிரி,டிச.8: கோத்தகிரி அருகேயுள்ள ஒரசோலை பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை பகுதியில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் இரவு நேரங்களில் காமராஜர் நகர், அண்ணா நகர், பூபதி ஊர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை உலா வருவது தொடர்கிறது. சிறுத்தை நாய், பூனை, கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடுகிறது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர அச்சமடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனத்தில் விடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
