ஈரோடு: தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்று அவரது தலைமையில் ஈரோடு பெருந்துறை சாலை பவளத்தாம்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கு அனுமதி கேட்டு ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமியிடம், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று காலை மனு கொடுத்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தவெக தலைவர் விஜய் ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ம் தேதி ஒருநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அன்று அவரது தலைமையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்காக ஈரோடு, பெருந்துறை சாலை பவளத்தாம்பாளையம் பகுதியில் தனியார் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி மற்றும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.அதற்கு உரிய அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும். ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டுள்ளது.
அரசு விதிமுறைகளுக்கு ஏற்ப கூட்டத்தில் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.விஜய் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, ‘16ம் தேதி வரை பொறுத்திருந்து பாருங்கள்’ என்றார்.தவெகவில் கூட்டணியில் அமமுக சேர வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, ‘ஒவ்வொரு இயக்கமும் தன் கொள்கை ரீதியாக பயணம் மேற்கொண்டு உள்ளனர். விஜய் வரும் போது மாற்றம் வரும் என நம்புகின்றனர். அந்த அடிப்படையில் மற்றவர்கள் சேர வாய்ப்பு உள்ளது’’, என்றார்.
