×

2026 பிபா உலக கோப்பை கால்பந்து; முதல் போட்டியில் மெக்சிகோ தென்ஆப்ரிக்கா மோதல்: `ஜெ’ பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா

வாஷிங்டன்: பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் 2026, ஜூன் 11 முதல் ஜூலை 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. 48 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் இதுவரை 42 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்னும் 6 அணிகள் தகுதிசுற்று மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. மொத்தம் 48 அணிகள் தலா 4 என 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடைபெற உள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் இடம்பெறும் அணிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது.

இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிபா தலைவர் கியானி இன்பான்டினோ மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா ஜெ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டன் இடம்பெற்றுள்ளன. பிரான்ஸ் ஐ பிரிவிலும், போர்ச்சுக்கல் கே பிரிவிலும், இங்கிலாந்து எல் பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. எச் பிரிவில் ஸ்பெயின், உருகுவே, ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து, நியூசிலாந்து, டி பிரிவில் அமெரிக்கா, பராகுவே, ஆஸ்திரேலியா, சி பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரேசில், மொராக்கோ இடம் பெற்றுள்ளன.

ஜூன் 11ம் தேதி மெக்சிகோ நகரில் நடைபெறும் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஏ பிரிவில் போட்டியை நடத்தும் மெக்சிகோ – தென்ஆப்ரிக்கா அணிகள் மோதவுள்ளன. பிரேசில் முதல் போட்டியில் மொராக்கோவையும், நெதர்லாந்து ஜப்பானையும் எதிர்கொள்கின்றன.நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, அல்ஜீரியாவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆட உள்ளது. தொடரை நடத்தும் அமெரிக்கா டி பிரிவில் தனது முதல் போட்டியில் 12ம் தேதி பராகுவேயுடன் மோதுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் மற்றும் சிறந்த 8 அணிகள் என 32 அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதிபெறும்.

குரூப் போட்டியில் ஜூன் 11 முதல் 27 வரையும், ரவுண்ட் 32 போட்டி ஜூன் 28-ஜூலை 3 வரையும், ரவுண்ட் 16 சுற்று ஜூலை 4-7, கால்இறுதி போட்டிகள் ஜூலை 9-11, அரையிறுதி ஜூலை 14 மற்றும் 15ம்தேதியும், 3வது இடத்திற்கான போட்டி ஜூலை 18ம் தேதியும், இறுதிபோட்டி ஜூலை 19ம் தேதியும் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் 11, மெக்சிகோவில் 3, கனடாவில் 2 என 16 நகரங்கள் போட்டிகளை நடத்துகின்றன. லீக், நாக்அவுட் போட்டிகளில் வெற்றிபெற்றால் கால்இறுதியில் அர்ஜென்டினா-போர்ச்சுக்கல் மோத வாய்ப்பு உள்ளது.

Tags : 2026 FIFA World Cup football ,Mexico ,South Africa ,Argentina ,Washington ,FIFA World Cup football ,United States, Mexico, Canada ,
× RELATED ஹெச்சிஎல் ஸ்குவாஷ்: வேலவன் சாம்பியன்