×

டி20 அணியில் சுப்மன் கில்

புதுடெல்லி: இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், வரும் 9ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி பற்றிய அறிவிப்பை, பிசிசிஐ நேற்று வௌியிட்டது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, சிவம் தூபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளனர். கில்லின் உடல் தகுதியை பொறுத்து, அவரது இடம் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் மோகித் சர்மா ஓய்வு
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் மோகித் சர்மா (37) அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். அவர், இந்தியாவுக்காக, 26 ஒரு நாள் போட்டிகளிலும், 8 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார். தவிர, 10 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் களம் கண்டுள்ளார்.

ஹெச்சிஎல் ஸ்குவாஷ் செமிபைனலில் வேலவன்
சென்னை: சென்னையில் நேற்று நடந்த, ஹெச்சிஎல் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா (39), எகிப்தின் நார்டினி கராசை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தமிழகத்தை சேர்ந்த வேலவன் செந்தில்குமார் ஆடவர் பிரிவிலும், இந்திய வீராங்கனை அனாஹத் சிங் மகளிர் பிரிவிலும் நடந்த போட்டிகளில் நேற்று வெற்றி வாகை சூடி அரை இறுதிக்கு முன்னேறினர்.

ஊக்க மருந்து சோதனை: சிக்கினார் சஞ்சனா
புதுடெல்லி: கடந்த அக்டோபரில் ராஞ்சியில் நடந்த எஸ்ஏஏஎப் சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது, 1500 மற்றும் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சஞ்சனா சிங் (18), அவரது பயிற்சியாளர் சந்தீப் ஆகிய இருவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான நடாவின் இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு ஓட்ட வீரர் ஹிமான்ஷு ரதியும், ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செஸ் தரவரிசை: 3 வயதில் சாதனை
போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சர்வாக்யா சிங் குஷ்வாகா, ஃபிடே தரவரிசையில் பட்டியலிடப்பட்ட, மிக இள வயது செஸ் வீரராக உருவெடுத்துள்ளார். சர்வாக்யாவுக்கு, 3 வயது 7 மாதம், 20 நாட்களே ஆகிறது. ஃபிடேவின் சமீபத்திய தரவரிசை பட்டியலில், சர்வாக்யாவின் தரவரிசை எண், 1572 ஆக உள்ளது. அவருக்கு, நிதின் சவுராசியா தீவிர செஸ் பயிற்சிகள் அளித்து வருகிறார். இதற்கு முன், மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிஷ் சர்க்கார், 3 வயது 8 மாதத்தில் ஃபிடே தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்திருந்தார். அந்த சாதனை தற்போது சர்வாக்யாவால் முறியடிக்கப்பட்டுள்ளது.

Tags : Shubman Gill ,New Delhi ,T20I ,India ,South Africa ,BCCI ,Suryakumar Yadav ,Shubman Gill… ,
× RELATED 100ல் 100 ரன் மிஷின் சாதிப்பாரா?