கொல்கத்தா: சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பீகார் அணிக்காக ஆடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 61 பந்துகளில் 108 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் நேற்று, மகாராஷ்டிரா-பீகார் அணிகள் மோதின. முதலில் ஆடிய பீகார் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி (14) 58 பந்துகளில் 100 ரன் விளாசினார்.
மொத்தத்தில் 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் அவுட்டாகாமல் 108 ரன் குவித்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் பீகார் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்தது. இருப்பினும், அடுத்து ஆடிய மகாராஷ்டிரா 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம், சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் சதம் விளாசிய இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். டி20 போட்டிகளில் வைபவ் விளாசிய 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், ஐபிஎல்லில் ராஜஸ்தான் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி, 35 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
