உலக கோப்பை ஜூனியர் ஹாக்கி: காலிறுதி போட்டியில் நாளை இந்தியா – பெல்ஜியம் மோதல்

சென்னை: உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் நாளை, இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள், சென்னை, மதுரை நகரங்களில் நடந்து வருகின்றன. மொத்தம் 24 அணிகள், தலா 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடந்தன. இதில், பி-பிரிவில் இடம்பெற்றிருந்த இந்தியா அதிரடியாக ஆடி, ஓமன், சிலி, சுவிட்சர்லாந்து அணிகளை வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் மொத்தம் 29 கோல்களை விளாசிய இந்திய அணிக்கு எதிராக வேறு எந்த அணியும் ஒரு கோல் கூட முடியவில்லை என்பது சிறப்பு. பி – பிரிவில் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றது.

அதேபோல், ஏ – பிரிவில் ஜெர்மனி 9, சி – பிரிவில் அர்ஜென்டினா 7, டி – பிரிவில் ஸ்பெயின் 9, இ – பிரிவில் நெதர்லாந்து 9, எப் – பிரிவில் பிரான்ஸ் 9 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றன. தவிர, இரண்டாம் இடம் பிடித்த அணிகளில் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து, பெல்ஜியம் அணிகளும் காலிறுதிக்கு முன்னேறின. இதையடுத்து, நாளை நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் – நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2வது போட்டியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகளும், 3வது காலிறுதியில் நெதர்லாந்து – அர்ஜென்டினா அணிகளும் களம் காண உள்ளன. கடைசி காலிறுதிப் போட்டியில் இந்தியா – பெல்ஜியம் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிகள் அனைத்தும், சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெறும். இப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவியிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும், இணையதளத்திலும் பார்க்க முடியும்.

Related Stories: