×

சுற்றுலா தலமாக மாறியுள்ள லவ்டேல் ரயில் நிலையம்; பயணிகள் போட்டோ எடுத்து கொண்டாட்டம்

ஊட்டி, டிச.1: சுற்றுலா தலமாக மாறியுள்ள பழமை வாய்ந்த லவ்டேல் ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் போட்டோ எடுத்து மகிழ்கின்றனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, பைக்காரா நீர் வீழ்ச்சி மற்றும் படகு இல்லத்திற்கு செல்கின்றனர். அதேபோல், ஊட்டியில் உள்ள படகு இல்லத்திற்கும் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சிலர் இயற்கை சூழ்ந்த பகுதிகள், தேயிலை தோட்டங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள் மற்றும் பழமை வாய்ந்த மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இது ஒரு புறம் இருக்க சமீப காலமாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வளைத்தளங்களில் சிலர் ஊட்டி அருகேயுள்ள லவ்டேல் பழமை வாய்ந்த ரயில் நிலையத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்துள்ளனர். இயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், மிகவும் அழகாக சமூக வளைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், அதனை பார்க்கும் சுற்றுலா பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பார்வையிட ஆவலுடன் லவ்டேல் ரயில் நிலையத்திற்கு படையெடுக்க துவங்கி விட்டனர்.

இதனால், வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இந்த ரயில் நிலையம் தற்போது சுற்றுலா பயணிகளால் களை கட்டுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு சென்று தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையம் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். மேலும், மலை ரயில் வந்து இங்கு நின்றால் ரயில் முன் நின்றும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இது மட்டுமின்றி, பெரும்பாலான புதுமண தம்பதிகள் இங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்கின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதுமண தம்பதிகள் வருவது அரிது.ஆனால், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நாள் தோறும் ஏதேனும் ஒரு ஜோடியாவது இங்கு வந்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கின்றனர். குறிப்பாக, கேரள மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் புதுமண தம்பதிகள் அதிகளவு இங்கு வந்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கின்றனர். நேற்று ஊட்டியில் மேக மூட்டம், அவ்வப்போது சாரல் மழை காணப்பட்ட போதிலும் இந்த ரயில் நிலையத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Lovedale Railway Station ,Ooty ,
× RELATED அஞ்சலக வாடிக்கையாளர் குறைதீர்க்கும் கூட்டம்