அரியலூர் நவ 28: அரியலூர் மாவட்ட வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனத்தினை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தயார் செய்தல், பயிற்சி, அச்சிடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணி, வாக்குச்சாவடி மறுவரையறை, வகைப்படுத்துதல், கட்டுப்பாட்டு பட்டியலினை புதுப்பித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலினை தயார் செய்து வெளியிடுதல், கோரிக்கைகளையும் மற்றும் மறுப்புரைகளையும் பெறுதல், வீடு வீடாக சென்று பெறப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களின் மீது வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணை பிறப்பித்தல் மற்றும் கோரிக்கைளும் மற்றும் மறுப்பரையாகவும் பெறப்பட்டவைகளை முடிவு செய்தல், இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலின் ஆரோக்கிய படிநிலைகளை சரிப்பார்த்து ஆணையத்தின் இறுதி ஒப்புதலை பெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கு அடுத்தாண்டு (2026) பிப்ரவரி மாதம் 7ம் தேதி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணியினை மேற்கொள்ளும் போது, வாக்காளர் பதிவு அலுவலர்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரை, வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதிலிருந்து விட கூடாது என்றும், தகுதியற்ற நபர்களை, வாக்காளராக சேர்க்க கூடாது எனவும் தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி வாக்குசாவடி நிலை அலுவலர்களால் நவ.4ம் தேதி முதல் அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு தற்போது பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் மீள பெறப்பட்டு நாளது தேதி வரை 81.19 சதவீதம் படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வாக்காளர்களிடயே சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கட்டங்களாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறன்றன.
அந்தவகையில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத்திற்குட்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்து வழங்காத வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து மீள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கிட கோரி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம் மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
கணக்கீட்டு படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளரின் பெயர் டிச.9ம் தேதியன்று வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது என்பதால், தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கத்திற்காக மேற்கொள்ளும் இப்பணிக்கு வாக்காளர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்குமாறும்,
மேலும் படிவங்களை பூர்த்தி செய்திட மாவட்;ட நிர்வாகத்தால், தொடர்புடைய வட்ட அலுவலகங்களில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) பரிமளம், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) பழனிசாமி, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் (தேர்தல்) வேல்முருகன், அரியலூர் வருவாய் வட்டாட்சியர் முத்துலெட்சுமி மற்றும் இதர அலுவலர்கள் உடன் இருந்தனர்.
